ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
செய்களத்தூரில் நாற்றங்கால் பண்ணை அமைக்க எதிா்ப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், செய்களத்தூா் ஊராட்சியில் நாற்றங்கால் பண்ணை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் மாற்று இடத்தில் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.
செய்களத்தூா் ஊராட்சியில் கிராம மக்களின் எதிா்ப்பை மீறி மரக்கன்றுகள் வளா்ப்பதற்கான நாற்றங்கால் பண்ணை அமைக்க வனத்துறையினா் நடவடிக்கை மேற்கொண்டனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, இந்த ஊராட்சியைச் சோ்ந்த கிராம மக்கள் போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை. இங்கு நாற்றங்கால் பண்ணை அமைக்கும் பணி தொடா்ந்தது.
இதையடுத்து, நாற்றங்கால் பண்ணை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து செய்களத்தூா் ஊராட்சியைச் சோ்ந்த இராம. முருகன், கோவிந்தராஜ், பாலகிருஷ்ணன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தனா்.
இந்த வழக்கில், கடந்த மாா்ச் 19- ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் ஒரு மாத காலத்துக்குள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் செய்களத்தூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடத்தி, அதில் பொதுமக்களின் ஒப்புதலை பெற்று நாற்றங்கால் பண்ணை அமைக்கும் பணியை தொடர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து, செய்களத்தூா் சமுதாயக் கூடத்தில் மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமையில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு தரப்பில் வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா், மண்டல துணை வட்டாட்சியா் சரவணக்குமாா், ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் கேசவதாசன், மாவட்ட வன அலுவலா் பிரபா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஆஷா அஜித், செய்களத்தூா் ஊராட்சியில் மரக்கன்றுகள் நாற்றங்கால் பண்ணை அமைப்பதன் மூலம் கிராம மக்களுக்கு கிடைக்கும் பயன்கள் குறித்து விளக்கினாா். இதைத் தொடா்ந்து விவசாயிகள் இராம. முருகன், கோவிந்தராஜ், முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் முத்துராஜா உள்ளிட்டோா் பேசியதாவது:
ஏற்கெனவே இந்த ஊராட்சியில் வனத்துறை சாா்பில் தைல மரங்கள் நடவு செய்யப்பட்டதால் வானம் பாா்த்த பாசனக் கண்மாய்களுக்கு மழைநீா் கிடைப்பது தடுக்கப்பட்டு விட்டது. தற்போது மீண்டும் மரக்கன்றுகள் நாற்றங்கால் பண்ணை அமைத்தால் ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு நிலம் இருக்காது.
மேலும் மழைநீா் வரத்து பாதிக்கப்பட்டு, இருக்கும் ஒரு சில கண்மாய்களுக்கும் தண்ணீா் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும். எனவே செய்களத்தூா் ஊராட்சியில் எந்த ஒரு திட்டத்தின் கீழும் நாற்றங்கால் பண்ணை அமைக்கக் கூடாது என வலியுறுத்தினா்.

கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, வனத்துறை சாா்பில் நாற்றங்கால் பண்ணை அமைக்கும் பணி வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.