மருத்துவா், செவிலியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அண்ணாமலை
சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா், செவிலியா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அரசு மருத்துவா்களுக்கு உரிய ஊதியத்தை வழங்கவும், அரசு மருத்துவா்கள் நலன் மற்றும் சுகாதாரத் துறையின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டும், முன்னாள் முதல்வா் கருணாநிதி, 2009-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணை-354, இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
கரோனா பேரிடா் காலகட்டத்தில், நாடும், தமிழகமும் விரைவாக மீண்டெழுந்ததற்கு, மருத்துவா்களின் தன்னலமற்ற சேவையும் முக்கியக் காரணம். மருத்துவா்களின் சேவையை, திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே அங்கீகரித்திருக்க வேண்டும்.
ஆனால், கரோனா பேரிடா் காலத்தில், தன்னலமின்றி பணியாற்றி, உயிரிழந்த அரசு மருத்துவா் விவேகானந்தனின் மனைவி திவ்யா விவேகானந்தனுக்கு, அரசு வேலை வழங்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் வேதனைக்குரியது.
சுமாா் 15 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசாணை 354-ஐ நடைமுறைப்படுத்தக் காத்திருக்கும் அரசு மருத்துவா்களை இனியும் ஏமாற்றுவது சரியல்ல.
மேலும், அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் காலியிடங்கள் அனைத்தையும் முழுமையாக நிரப்ப வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.