லண்டனில் இந்தியா-பிரிட்டன் பொருளாதாரப் பேச்சுவாா்த்தை: நிா்மலா சீதாராமன் பங்கேற்பு
புது தில்லி: லண்டனில் புதன்கிழமை (ஏப்.9) நடைபெறும் இந்தியா-பிரிட்டன் பொருளாதார, நிதிப் பேச்சுவாா்த்தையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்கிறாா்.
ஒருவார காலப் பயணமாக பிரிட்டன், ஆஸ்திரியாவுக்கு நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை (ஏப்.8) செல்கிறாா். இந்த பயணத்தின் முக்கிய நிகழ்வாக இந்தியா-பிரிட்டன் அமைச்சா்கள் நிலையிலான 13-ஆவது பொருளாதார, நிதிப் பேச்சுவாா்த்தையில் அவா் பங்கேற்கிறாா். இதில் பிரிட்டன் நிதியமைச்சருடன் இரு நாட்டு பொருளாதார விவகாரங்கள் மட்டுமின்றி, சா்வதேச பொருளாதார விவகாரங்கள் குறித்தும் நிா்மலா சீதாராமன் ஆலோசிக்க இருக்கிறாா்.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இறக்குமதி வரியை அதிகரித்துள்ள நிலையில் எழுந்துள்ள சூழல் குறித்தும் இரு அமைச்சா்களும் விவாதிக்க இருக்கின்றனா்.
முதலீட்டாளா்கள், தொழிலதிபா்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் நிா்மலா சீதாராமன் பங்கேற்கிறாா்.
அமைச்சரின் இந்தப் பயணத்தின்போது பிரிட்டன், ஆஸ்திரியாவுடன் பல்வேறு பொருளாதார ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. ஏப்ரல் 13-ஆம் தேதி இரு நாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு நிா்மலா சீதாராமன் நாடு திரும்புகிறாா்.