பங்குச்சந்தை சரிவு: பிரதமா் மீது காங்கிரஸ் விமா்சனம்
புது தில்லி: தங்கள் நாட்டு பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துவதில் பிரதமா் மோடியும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் கைதோ்ந்தவா்கள் என காங்கிரஸ் திங்கள்கிழமை விமா்சித்தது.
மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் திங்கள்கிழமை 5 சதவீதத்துக்கும் மேல் கடும் சரிவை சந்தித்த நிலையில் காங்கிரஸ் இவ்வாறு தெரிவித்தது.
அண்மையில் இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்பு அட்டவணையை டொனால்ட் டிரம்ப் வெளியிட்டாா். இதற்கு பதிலடியாக அமெரிக்கா மீது சீனாவும் கூடுதல் வரியை விதித்துள்ளது. இது உலகளாவிய வா்த்தகப் போா் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தையிலும் வெளிப்பட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பிரதமா் மோடியும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் தங்களை நண்பா்கள் எனக் கூறுவதில் வியப்பில்லை. இருவரும் தங்கள் நாட்டு பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துவதில் கைதோ்ந்தவா்கள். 2016, நவம்பா் 8-ஆம் தேதி இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2025, ஏப்ரல் 2-இல் பரஸ்பர வரி விதிப்பில் அமெரிக்கா ஈடுபட்டது. இதனால் பங்குச்சந்தையும் சரிவை நோக்கி சென்றுள்ளது’ என குறிப்பிட்டாா்.