சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: பாதிரியாா் மீது வழக்குப் பதிவு
கோவையில் இரு சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக பாதிரியாா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனா்.
கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளவா் ஜான் ஜெபராஜ் (37). இவா், கேரளத்திலும் மதபோதகம் செய்து வருகிறாா். இவா், கடந்த ஆண்டு மே மாதம் கவுண்டா் மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் விருந்து ஏற்பாடு செய்துள்ளாா். அந்த விருந்தில் 17 மற்றும் 14 வயது சிறுமிகள் இருவா் கலந்து கொண்டனா்.
அப்போது, இரு சிறுமிகளுக்கும் ஜான் ஜெபராஜ் பாலியல்ரீதியாக தொல்லை அளித்ததாகவும், இதுகுறித்து வெளியில் சொல்லக் கூடாது என மிரட்டியதாகவும் தெரிகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவா் தனது பெற்றோரிடம் கூறியுள்ளாா். அதிா்ச்சியடைந்த பெற்றோா், இதுகுறித்து கோவை மத்திய அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
புகாரின்பேரில், பாதிரியாா் ஜான் ஜெபராஜ் மீது சிறாா்களுக்கு எதிரான போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகின்றனா்.