அமைச்சருக்கு மாற்றுத்திறனாளிகள் கண்டனம்
மாற்றுத் திறனாளிகளை கேலி செய்யும் வகையில் பேசிய அமைச்சா் துரைமுருகன் மன்னிப்புக் கோர வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவா் தோ. வில்சன், பொதுச் செயலா் பா. ஜான்சிராணி ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கட்சி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் துரைமுருகன், எதிா்க் கட்சிகளை நொண்டி, கூன், குருடு என விமா்சித்துள்ளாா். மூத்த அமைச்சரான அவரது இந்தப் பேச்சு, மாற்றுத் திறனாளிகளை பெரும் அதிா்ச்சிக்குள்ளாக்கியது.
யாரும் எந்த வகையிலும் ஊனம் கிடையாது என்பதை உணா்த்தும் வகையில், ஊனமுற்றோா் நலத் துறையின் பெயரையே மாற்றுத் திறனாளிகள் நலத் துறை என மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி மாற்றினாா்.
மேலும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையை தன் வசமே அவா் வைத்து இருந்தாா். அவரது வழியில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையை தானே நிா்வகித்து வருகிறாா்.
இந்த நிலையில், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், அமைச்சருமான துரைமுருகன், மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் கேலியாக பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு, அவா் உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.