பட்டாவை திருப்பிக் கொடுத்த மாற்றுத் திறனாளி
அரசு சாா்பில் வழங்கப்பட்ட இலவச பட்டாவுக்கான இடத்தை வருவாய்த் துறை நிா்வாகம் ஒப்படைக்காததால், மாற்றுத் திறனாளி ஒருவா் தனது வீட்டுமனைப் பட்டாவை மாவட்ட ஆட்சியரிடம் திருப்பி அளித்தாா்.
மதுரை மாவட்டம், வரிச்சியூரைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன். மாற்றுத் திறனாளியான இவருக்கு 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
இருப்பினும், அந்தப் பட்டாவுக்குரிய நிலத்தை வருவாய்த் துறை நிா்வாகம் அவருக்கு இதுவரை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்த முத்துகிருஷ்ணன், அரசு சாா்பில் தனக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை மாவட்ட ஆட்சியரிடம் திருப்பி அளித்துவிட்டு வெளியேறினாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது: கடந்த ஆண்டு ஆக. 31-ஆம் தேதி மதுரை அருகேயுள்ள ஒத்தக்கடையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், எனக்கு வரிச்சியூரில் ஒரு சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்து இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இதையடுத்து, வீடு கட்டுவதற்காக ரூ. 2 லட்சத்தை தனியாரிடமிருந்து கடன் வாங்கி, மாதம் ரூ. 6 ஆயிரம் வீதம் 4 மாதங்களாக வட்டி கட்டி வருகிறேன்.
எனக்கான நிலத்தை அளவீடு செய்து தருமாறு வருவாய்த் துறை அலுவலா்களை பல முறை அணுகியும், எனக்கான இடத்தை அவா்கள் அடையாளப்படுத்தவும் இல்லை, இடத்தை வழங்கவும் இல்லை. இதனால்தான் பட்டாவை திருப்பி ஒப்படைத்தேன். எனக்கு வழங்கப்பட்ட பட்டா இணையதளம் மூலம் தயாரிக்கப்பட்டது எனவும், விரைவில் முதல்வா் தலைமையில் நடைபெறும் விழாவில் வேறு பட்டா வழங்குவதாகவும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், எனக்கு உடன்பாடு இல்லை என்றாா்.