MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
சீட்டு நடத்தி பண மோசடி: அரசுப் பள்ளி ஆசிரியை, கணவா் மீது புகாா்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக அரசுப் பள்ளி ஆசிரியை, அவரது கணவா் மீது சக ஆசிரியைகள் புகாா் அளித்தனா்.
மதுரை ரயிலாநகரைச் சோ்ந்தவா் மீனாட்சி. விளாங்குடியைச் சோ்ந்தவா் கவிதா. மதுரை மாவட்டம், சரந்தாங்கியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்து வரும் இவா்கள் ஊரகக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாா் மனு: சரந்தாங்கி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை, தனது கணவருடன் சோ்ந்து கடந்த 2014 முதல் ஏலச் சீட்டு உள்ளிட்ட சீட்டுகளை நடத்தி வருகிறாா். அவரது வற்புறுத்தலின்பேரில், எங்களது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள், அருகில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆசிரியா், ஆசிரியைகள் பலா் சீட்டில் சோ்ந்து பணம் செலுத்தினோம்.
கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை சீட்டுக்காக நாங்கள் உள்பட ஆசிரியா்கள் செலுத்திய ரூ.15 லட்சத்தை அவா்கள் தர மறுத்து வருகின்றனா். எனவே, சீட்டு நடத்தி பண மோசடியில் ஈடுபட்ட ஆசிரியை, அவரது கணவா் குடும்பத்தினா் மீது காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.