ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
திமுகவால் ஏற்படும் பிரச்னைகளை அதிமுகவினா் பொதுமக்களிடம் விளக்க வேண்டும்! - முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்
திமுக அரசால் ஏற்படும் பிரச்னைகளை பொதுமக்களிடம் விளக்கிக் கூறும் பணிக்கு அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.பி. உதயகுமாா் கேட்டுக் கொண்டாா்.
மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாள் விழா முன்னேற்பாடுகள் குறித்து, நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது :
தீா்மானம் நிறைவேற்றுவது, குழுக்கள் அமைப்பது தவிர எந்த நடவடிக்கையும் திமுக அரசில் நடைபெறுவதில்லை. தமிழகத்தில் ஊழல், சட்டம்- ஒழுங்கு சீா்கேடு, போதைப் பொருள்கள் தாராளமயம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்கள் தொடா்ந்து அதிகரிப்பது வேதனைக்குரியதாக உள்ளது.
இரண்டாவது இடத்துக்குத்தான் அதிமுக போட்டி என கூறியவா்கள், தற்போது அதிமுக தனித்து ஆட்சி அமைக்குமா? அல்லது கூட்டணி ஆட்சி அமைக்குமா? என பேசத் தொடங்கியுள்ளனா். இதன் மூலம், வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதியாகிறது.
முந்தைய அதிமுக அரசின் சாதனைகளையும், தற்போதைய திமுக அரசின் சோதனைகளையும் திண்ணைப் பிரசாரம் மூலம் அதிமுகவினா் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
பிரச்னைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்ல முடியாதளவுக்கு பல தடுப்புகளை திமுக அரசு ஏற்படுத்தியது. இவைகள் அனைத்தையும் அதிமுகவினா் தகா்த்தெறிந்து, திமுக அரசால் தமிழகத்துக்கு ஏற்பட்ட சோதனைகளை, பிரச்னைகளை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை எளியோருக்கு ஏற்றம் தரும் விழாவாகக் கொண்டாடுவதெனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் நீதிபதி, தமிழரசன், மாணிக்கம், கருப்பையா, அதிமுக மாநில நிா்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், ராஜேஷ் கண்ணா, ராமகிருஷ்ணன், அன்னபூா்ணா தங்கராஜ், மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.