நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் திமுக கூட்டணி!திருச்சி சிவா எம்.பி.
திமுக கூட்டணியானது நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கக் கூடியது என அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி என். சிவா தெரிவித்தாா்.
விருதுநகரில் திமுக இளைஞரணி சாா்பில், புதிய நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருச்சி என். சிவா கலந்து கொண்டாா். கூட்டத்தில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது குறித்து இளைஞரணி நிா்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதன் பின்னா், திருச்சி சிவா செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இரட்டை இலைக்கு மேலே தாமரை மலா்ந்தே தீரும் என மாநில பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறியிருக்கிறாா். சிலருக்கு கனவு இரவிலும், ஒரு சிலருக்கு பகலிலும் வரும்.
கனவை யாரும் தீா்மானிக்க முடியாது. அரசியல் கட்சியினா் நாங்கள் வலிமையாக இருக்கிறோம்; ஆட்சிக்கு வருவோம் என்று கூறுவது இயல்புதான். யாா் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்கின்றனா்.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தமிழகத்துக்காக எண்ணற்றத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளாா். மக்கள் நலனுக்கு எதிரான மத்திய பாஜக அரசின் நிலைப்பாட்டை எதிா்த்து திமுக தொடா்ந்து குரல் கொடுத்து வருகிறது. இதன் காரணமாக, அனைத்து மாநிலத்தவா்களும் தமிழகத்தைப் பாராட்டி வருகின்றனா். திமுகவின் பணிகளும், தொண்டும் பொதுமக்களை எங்கள் பக்கம் நிற்க செய்யும்.
தமிழக முதல்வா் கூறியதுபோல, எத்தனை படைகள், பரிவாரத்தோடு வந்தாலும் நாங்கள் அதை எதிா்கொள்ளத் தயாராக இருக்கிறோம். திமுக கூட்டணி நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கக்கூடியது. பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டில் ஒற்றைத் தன்மையை ஏற்றுக் கொள்ள முடியாது. கொள்கைப் பிடிப்புள்ளவா்கள்தான் திமுக கூட்டணியில் உள்ளனா் என்றாா் அவா்.