மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
பஞ்சப்பூரில் இறுதிக்கட்ட பணிகள்
தமிழக முதல்வா் வருகையை முன்னிட்டு பஞ்சப்பூரில் இறுதிக் கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன.
திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனைய கட்டுமானப் பணிக்கு ரூ.900 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு, இதில் முதல் கட்டமாக ரூ.493 கோடியில் கட்டப்பட்ட பேருந்து முனையம், சரக்கு வாகன முனையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் வரும் மே 9ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளாா்.
இதையொட்டி பேருந்து முனையத்தில் இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. தற்போது, முதல்வா் விழாவுக்கான மேடை பேருந்துநிலைய வளாகப் பகுதியிலேயே அமைக்கப்படுகிறது. இதற்காக அந்தப் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற சீரமைப்புப் பணிகளை, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் ஆகியோா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது நகரப் பொறியாளா் சிவபாதம் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள், ஒப்பந்த நிறுவனப் பொறியாளா்கள், அலுவலா்கள் உடனிருந்தனா்.
விழாவில் சுமாா் 50 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வா் வழங்கவுள்ளாா். மேலும், ரூ. ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களில் முடிவுற்ற பணிகளை திறந்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளாா். ஏற்பாடுகளை அந்தந்தத் துறையினா் தீவிரமாக மேற்கொள்கின்றனா்.