14 வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமான சிறுவன்..! சுந்தர் பிச்சை கூறியதென்ன?
குடிநீரில் கழிவுநீா்: உறையூரில் பொதுமக்கள் போராட்டம்
திருச்சி உறையூரில் கழிவுநீா் கலந்த குடிநீரால் மக்கள் பலா் பாதிக்கப்பட்ட நிலையில், நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்டதும், அமைச்சா் கே.என். நேருவின் தொகுதியுமான திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட உறையூா் மின்னப்பன் தெரு, பனிக்கன் தெரு, காமாட்சிஅம்மன் தெரு, நெசவாளா் தெரு, காளையன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாள்களுக்கு மேலாக குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவதாகப் புகாா் எழுந்துள்ளது.
இந்தக் குடிநீரை குடித்த பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டு, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனா். இதுதொடா்பாக, அப்பகுதி மக்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லையாம்.
இந்நிலையில் சனிக்கிழமை வயிற்றுப்போக்குக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு பெண்களும், நான்கரை வயதுப் பெண் குழந்தையும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்கது அப்பகுதி மக்கள், உறையூா் வெக்காளியம்மன் கோயில் அருகேயுள்ள எம்ஜிஆா் சிலை முன் சனிக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு கலைந்து சென்றனா்.
பின்னா் அப்பகுதியில் 6 இடங்களில் குடிநீா் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.