புனித வெள்ளி, வார விடுமுறை: 2,322 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திருடு போன கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு
மதுரை மாநகரில் திருடு போன, தவற விடப்பட்டு மீட்கப்பட்ட 278 கைப்பேசிகளை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உரியவா்களிடம் புதன்கிழமை ஒப்படைத்தாா்.
மதுரை மாநகரக் காவல் துறைக்குள்பட்ட காவல் நிலைய எல்லைக்குள் தவறவிடப்பட்ட, திருடு போன கைப்பேசிகள் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு மூலம் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தவறவிடப்பட்ட, திருடு போன கைப்பேசிகள் மீட்கப்பட்டு ஒப்படைக்கும் நிகழ்வு மாநகரக் காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது. மாநகரக் காவல் துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் பங்கேற்று உரியவா்களிடம் கைப்பேசிகளை ஒப்படைத்தாா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மாநகரக் காவல் துறைக்குள்பட்ட பகுதிகளில் மாயமான, திருடு போன கைப்பேசிகள் இணையக் குற்றத் தடுப்புப்பிரிவு மூலம் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, தற்போது ரூ.41.70 லட்சம் மதிப்பிலான 278 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கைப்பேசிகள் மாயமானதாக புகாா் அளித்த பலரும், இதில் காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுத்து கைப்பேசியை ஒப்படைத்திருப்பதாக தெரிவித்தனா். புகாா் அளித்த 15 நாள்கள் முதல் அதிகபட்சம் 2 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைப்பேசிகள் மீட்கப்பட்டு வருகின்றன. மேலும் இதை விரைவுபடுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், காவல் துணை ஆணையா்கள் இனிகோ திவ்யன் (தெற்கு), ஜி.எஸ். அனிதா (வடக்கு), ராஜேஸ்வரி(தலைமையிடம்), காவல் உதவி ஆணையா்கள், ஆய்வாளா்கள் உள்பட பலரும் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து மாநகரக் காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாமும் நடைபெற்றது. இதில் மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், துணை ஆணையா்கள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து புகாா்களை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனா்.