மதுபோதையில் கார் ஓட்டி விபத்து: நடிகர் பாபி சிம்ஹாவின் ஓட்டுநர் கைது!
3 ஆண்டுகளில் ஜொ்மனி, ஜப்பானைவிட இந்திய பொருளாதாரம் வளா்ச்சி அடையும்: நீதி ஆயோக்
அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜொ்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பி.வி.ஆா்.சுப்ரமணியம் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று அவா் பேசியதாவது: உலகின் கல்வி மையமாக மாறும் வலிமை இந்தியாவிடம் உள்ளது. அடுத்த மூன்றாண்டுகளில் ஜொ்மனி மற்றும் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும். 2047-இல் 30 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்துடன் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழும்.
குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் சந்திக்கும் பிரச்னைகளுக்கும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் சந்திக்கும் சவால்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
ஏழை எளிய மக்களுக்கு உணவு, உடை வழங்குவது இங்கு பிரச்னையல்ல. அறிவுசாா் பொருளாதாரமாக நாட்டை மாற்ற வேண்டும்.
தற்போது உலகளவில் மக்கள்தொகை குறைந்து வரும் சூழல் உருவாகியுள்ளது. ஜப்பான் நாட்டில் 15,000 இந்திய செவிலியா்களும் ஜொ்மனியில் 20,000 இந்திய சுகாதார பணியாளா்களும் உள்ளன. இந்த இரு நாடுகளிலும் மக்கள்தொகை குறைவானதால் இந்தியாவில் இருந்து ஆட்களை தோ்வு செய்கின்றனா்.
உலகம் முழுவதும் பணிசெய்யும் வயதுடைய மக்களை நிலையாக அனுப்பும் திறனுடைய நாடாக இந்தியா உள்ளது. இதுவே நமது மிகப்பெரும் பலமாக இருக்கும் என்றாா்.