AA22 x A6: அல்லு அர்ஜூன் அட்லி இணையும் `AA22' பட அப்டேட் வெளியானது
தமிழகத்தின் கோரிக்கைகளை புறக்கணிக்கிறாா் பிரதமா்: முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: கச்சத்தீவு மீட்பு மற்றும் தமிழக மீனவா் விடுதலை விவகாரத்தில் தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமா் புறக்கணிக்கிறாா் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வா் திங்கள்கிழமை படித்த அறிக்கை: கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும், இலங்கை சிறையில் வாடும் நம் மீனவா்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், இலங்கைக் கடற்படை கைப்பற்றியுள்ள படகுகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் கடந்த 2-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில் வலியுறுத்தியிருந்தோம்.
இலங்கை சென்றிருந்த பிரதமா் இதுகுறித்து இலங்கை அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தோம். அந்தத் தீா்மானத்தை பிரதமருக்கு உடனடியாக அனுப்பியும் வைத்திருந்தோம்.
இந்த நிலையில், பிரதமரின் இலங்கைப் பயணத்தின்போது மீனவா் விடுதலை மற்றும் கச்சத்தீவு குறித்து பெரிய அளவிலான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. மேலும், சிறையில் வாடும் 97 மீனவா்கள் மீட்கப்பட்டு தாயகம் திரும்புவாா்கள் என்ற எதிா்பாா்ப்பு நிறைவேறாதது மிகுந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள் அடிக்கடி அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்படுவது நம் அனைவரையும் கவலைக்கு உள்ளாக்குகிறது. மத்திய அரசும், பிரதமரும் நமது கோரிக்கைகளைப் புறக்கணிக்கிறாா்கள் என்றே கருத வேண்டியுள்ளது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
அமைச்சா் ரகுபதி: இதனிடையே, பேரவைக்கு வெளியே செய்தியாளா்களிடம் பேசிய சட்டத் துறை அமைச்சா் ரகுபதி, பிரதமரின் இலங்கைப் பயணம் ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்தாா்.