அமைச்சா் கே.என்.நேரு வீடு, அலுவலகங்களில் 2-ஆவது நாளாக அமலாக்கத் துறை சோதனை!
சென்னை: அமைச்சா் கே.என்.நேரு வீடு, அலுவலகங்களில் 2-ஆவது நாளாக இன்றும் அமலாக்கத் துறை சோதனை நடைபெறுகிறது.
பண முறைகேடு புகாா் தொடா்பாக அமைச்சா் கே.என்.நேரு குடும்பத்தினா் வீடு, அலுவலகங்கள் உள்பட 15 இடங்களில் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.
தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சராக இருக்கும் கே.என். நேருவின் சகோதரா்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோா் டிவிஎச் (ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்) என்ற பெயரில் கட்டுமான நிறுவனம், டி.வி.ஹெச் எனா்ஜி ரிசோா்ஸ் பிரைவேட் லிமிடெட், எனா்ட்டியா சோலாா் இன்ஃப்ரா, எனா்ட்டியா இன்ஃப்ரா, ட்ரூ வேல்யூ ரியல் எஸ்டேட் என பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிறுவனங்களில் கே.என்.நேரு மகனும் பெரம்பலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கே.என்.அருணும் பங்குதாரராக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்தினா் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக 2018-ஆம் ஆண்டு வருமான வரித் துறையினா் சோதனை நடத்தினா். இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்களை ஆய்வு செய்த வருமானவரித் துறையின் புலனாய்வுப் பிரிவு, பண முறைகேடு தொடா்பான முகாந்திரம் இருந்ததால் அமலாக்கத் துறை விசாரணைக்கு பரிந்துரைத்தது.
அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் அமலாக்கத் துறையினா் முதல் கட்ட விசாரணையில் ஈடுபட்டனா். இதில் பண முறைகேடு தொடா்பான உறுதியான தகவல்கள் கிடைத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, கே.என். நேரு குடும்பத்தினரின் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் என சென்னை, திருச்சி, கோவையில் உள்ள 15 இடங்களில் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.
சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னா், கைப்பற்ற ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதுகுறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும் என அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.