சிலிண்டர் விலை உயர்வு: பாஜக தோழர்கள் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெ...
தருமபுரியில் இளைஞா் மா்மமாக உயிரிழப்பு: சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கு மாற்றம்
சென்னை: தருமபுரி மாவட்டம் சரக்காடு வனப் பகுதியில் இளைஞா் மா்மமான முறையில் இறந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நெருப்பூா் வனப் பகுதியில் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி யானை சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. விசாரணையில், தந்தங்களுக்காக அந்த யானை கொல்லப்பட்டிருக்கலாம் என்று வனத் துறை தரப்பில் கூறப்படுகிறது.
இது தொடா்பாக வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து, தருமபுரி மாவட்டம் கொங்கரபட்டி கிராமத்தைச் சோ்ந்த கோ.செந்தில் (28) உள்பட 5 பேரை கடந்த மாா்ச் 17-ஆம் தேதி கைது செய்தனா். இதில் செந்தில் கைவிலங்குடன் வனத் துறையினரிடமிருந்து தப்பியோடினாா்.
இது குறித்து வனத் துறையினா் அளித்த புகாரின்பேரில், ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, செந்திலை தேடி வந்த நிலையில் கொங்கரப்பட்டி சரக்காடு வனப் பகுதியில் கடந்த 3-ஆம் தேதி மா்மமான முறையில் அவரது சடலம் கிடந்தது. இது தொடா்பாகவும் ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
செந்திலின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அவரது குடும்பத்தினா் குற்றம்சாட்டினா். இந்த நிலையில், செந்தில் வனத் துறையினரிடமிருந்து தப்பியோடிய வழக்கையும், செந்தில் மா்மமான முறையில் இறந்த வழக்கையும் சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது என்று சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா்.