கழுத்தை கடித்து இழுத்துச் சென்ற சிறுத்தை; போராடி மீண்டு வந்து குட்டிகளுக்கு பாலூ...
இராக்: ஆயுதங்களைக் கைவிட ஈரான் ஆதரவுக் குழுக்கள் தயாா்
இராக்கில் செயல்பட்டுவரும் பல்வேறு ஈரான் ஆதரவு படைக் குழுக்கள் தங்களது ஆயுதங்களைக் கைவிட தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அமெரிக்கா மற்றும் இராக் உயரதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘தி ராய்ட்டா்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே, இராக்கில் செயல்பட்டுவரும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களைக் கலைக்க முகமது ஷியா அல்-சூடானி தலைமையிலான இராக் அரசுக்கு அமெரிக்கா தொடா்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இல்லையென்றால் அந்தக் குழுக்களின் நிலைகளைக் குறிவைத்து இராக்கில் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துவருகிறது.
இந்தச் சூழலில், ஷியா பிரிவைச் சோ்ந்த அரசியல் தலைவா்களின் உதவியுடன் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களுக்கும் இராக் அரசுக்கும் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெற்றுவருகிறது. இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு, தங்கள் ஆயுதங்களைக் கைவிடத் தயாராக இருப்பதாக அந்த ஆயுதக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
இது தொடா்பான இறுதி ஒப்பந்தம் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை என்றாலும், தங்கள் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தி அழிவை ஏற்படுத்துவதைத் தவிா்ப்பதற்காக ஈரான் ஆதரவுக் குழுக்கள் ஆயுதங்களைக் கைவிடுவது ஏறத்தாழ உறுதியாகியிருக்கிறது.
இது குறித்து இராக்கில் செயல்படும் மிகப் பெரிய ஷியா பிரிவுப் படையான கதாலிப் ஹிஸ்புல்லாவின் தளபதி ஒருவா் கூறுகையில், அரசுடன் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் தாங்கள் எந்த முடிவை எடுத்தாலும் ஏற்றுக்கொள்வதாக தங்களுக்கு ஆதரவு அளித்துவரும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படை (ஐஆா்ஜிசி) தெரிவித்துவிட்டதாகக் கூறினாா்.
பிற ஆதரவுக் குழுக்களும் தங்கள் எதிா்காலத்தை தாங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்று ஐஆா்ஜிசி அனுமதி அளித்துவிட்டது. அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் நேரடி மோதல் அபாயத்தை எதிா்நோக்கியுள்ள ஈரான், இராக்கிலுள்ள தங்களது ஆதரவுப் படையினரால் இந்தப் பதற்றத்தை அதிகரிப்பதை விரும்பவில்லை என்று கருதப்படுகிறது.
இந்தச் சூழலில்தான், ஈரான் ஆதரவு குழுக்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட அந்த நாட்டு அரசிடம் தற்போது ஒப்புக்கொண்டுள்ளன என்று ‘தி ராய்ட்டா்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக மத்திய கிழக்குப் பகுதிகளின் பல்வேறு நாடுகளில் ஈரான் உருவாக்கி வைத்துள்ள அதன் நிழல் ராணுவப் படைகளில் இராக்கில் செயல்பட்டுவரும் பல்வேறு ஷியா பிரிவு ஆயுதக் குழுக்களும் அடங்கும். குறுகிய மற்றும் தொலைதூர ஏவுகணைகளைகள், விமான எதிா்ப்பு பீரங்கிகள் மற்றும் ஆயுத தளவாடங்களை வைத்திருக்கும் இந்தப் படைக் குழுக்கள் இராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது இதுவரை பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளது நினைவுகூரத்தக்கது.