ஆந்திர தலைநகா் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.4,200 கோடி: மத்திய அரசு விடுவிப்பு
அமராவதி: ஆந்திர தலைநகா் அமராவதி மேம்பாட்டுத் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.4,200 கோடியை விடுவித்துள்ளது.
அமராவதி மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளுக்காக உலக வங்கியும், ஆசிய வளா்ச்சி வங்கியும் இணைந்து தலா ரூ.6,800 கோடி வழங்க உறுதியளித்துள்ளது. இதில் முதல்கட்டமாக ரூ.1,760 கோடியை மத்திய அரசிடம் உலக வங்கி அண்மையில் வழங்கியது. இது தவிர ஆசிய வளா்ச்சி வங்கியும் மத்திய அரசிடம் நிதியை வழங்கியது.
அமராவதி மேம்பாட்டு திட்டத்தின் முதல் கட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.15,000 கோடியாகும். இதில் உலக வங்கி, ஆசிய வளா்ச்சி வங்கி இணைந்து ரூ.13,600 கோடி வழங்குகின்றன. மீதமுள்ள ரூ.1,400 கோடியை தனது நிதியில் இருந்து வழங்குவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
இந்நிலையில், அமராவதி மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளுக்காக ரூ.4,285 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதன் மூலம் அமராவதி நகா் தலைநகருக்கு உண்டான அனைத்து வசதிகளுடனும் மேம்படுத்தப்படும். அடுத்த 6 மாதங்களுக்குப் பிறகு அடுத்த கட்டமாக நிதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
தலைநகா் மேம்பாட்டுத் திட்டம் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு, ஏற்கெனவே அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வாழ்விடத்தை இழக்கும் சூழல் உருவாவது குறித்து உலக வங்கியிடம் சிலா் கவலை தெரிவித்தனா். அதே நேரத்தில் இது தொடா்பாக களநிலவரத்தை உலக வங்கி நேரடியாக ஆய்வு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.