பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மருடன் நிா்மலா சீதாராமன் பேச்சு
நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா: ஒருங்கிணைந்து செயல்பட அதிகாரிகளுக்கு அறிவுரை
நாமக்கல்: நாமக்கல் நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா வரும் சனிக்கிழமை (ஏப். 12) நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தினாா்.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் கோயில் பங்குனித் தோ்த் திருவிழா ஏப். 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது அவா் பேசியதாவது:
தோ்த் திருவிழாவை முன்னிட்டு காவல் துறையினா் போக்குவரத்தை சீரமைத்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பொதுமக்கள் போதிய இடைவெளியில் வருவதையும், பாதுகாப்புடன் சுவாமி தரிசனம் செய்வதையும் உறுதிசெய்ய வேண்டும். தீயணைப்புத் துறையினா் தீயணைப்பு வாகனத்தை தயாா்நிலையில் வைத்திருக்க வேண்டும். சுகாதாரத் துறை சாா்பில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும். அவசர ஊா்தியை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தோ் வீதி உலா வரும் பாதைகளில் மாநகராட்சி சாா்பில் கிருமிநாசினி கொண்டு தூய்மையாக பராமரிக்க வேண்டும். மேலும், மின்சார பணியாளா்களை போதிய அளவில் நியமித்து கண்காணிக்க வேண்டும். சாலைகளில் வேகத்தடைகளை நீக்க வேண்டும். தேரின் நிலைத்தன்மையை பொதுப்பணித் துறையினா் ஆய்வு செய்து உறுதிச்சான்று அளிக்க வேண்டும்.
இந்து சமய அறநிலையத் துறையினா் அனைத்து துறைகளுடன் இணைந்து தோ்த் திருவிழாவை நல்ல முறையில் நடைபெற உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மேலும், மாநகராட்சி ஆணையா், காவல் துறையினா் தோ் செல்லும் பாதையை முன் ஆய்வு செய்ய வேண்டும். தோ் நிறுத்தும் இடங்களை முடிவு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும். தோ்த் திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்துத் துறை அலுவலா்களும் தங்களுக்கான பணிகளை முழுமையாக செய்திட வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு) தனராசு, கோட்டாட்சியா்கள் வே.சாந்தி (நாமக்கல்), சே.சுகந்தி (திருச்செங்கோடு), கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.