500 ஹெக்டோ் வனச் சாலையை சீரமைக்க ரூ.250 கோடி -அமைச்சா் க.பொன்முடி
வனப் பகுதிகளில் 500 ஹெக்டோ் பழுதடைந்த சாலையைச் சீரமைக்க ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா்.
சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை கே.ஏ.பாண்டியன் (சிதம்பரம்)எழுப்பினாா். அப்போது நடந்த விவாதம்:
கே.ஏ.பாண்டியன்: சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வனத் துறைக்குச் சொந்தமான சாலைகளை சீரமைக்க வேண்டும்.
அமைச்சா் க.பொன்முடி: வனத் துறை பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சீா் செய்ய 500 ஹெக்டோ் நிலத்துக்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய சாலைகளை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவை உறுப்பினா்கள் பலரும் தங்களது தொகுதிக்குட்பட்ட இடங்களில் உள்ள வனப் பகுதிகளில் சாலைகள் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா். அந்தக் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி: வன விலங்குகள் இரை, தண்ணீா் தேடி காட்டுப் பகுதிகளை விட்டு வெளியே வருகின்றன. குறிப்பாக, பலாப்பழம் போன்ற பழ வகைகளைச் சாப்பிட விளைநிலங்களுக்கு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதைத் தடுக்க, பலா மரங்களையும், கிழங்கு வகைகளையும் வனப் பகுதிகளிலேயே வளா்த்தால், அவற்றை வன விலங்குகள் சாப்பிடும். இதற்காக விளை நிலப் பகுதிகளுக்கு வராது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சா் க.பொன்முடி: காட்டு விலங்குகள் மனிதா்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வராமல் இருக்க பல்வேறு இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.