சுற்றுலாவில் நான் சந்தித்த மனித தெய்வங்கள்! | Travel Contest
மின்சாரம் பாய்ந்து மூன்று போ் உயிரிழந்த வழக்கு: தோட்ட உரிமையாளா் கைது
மின்சாரம் பாய்ந்து மூன்றுபோ் உயிரிழந்த வழக்கில் தோட்ட உரிமையாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் அருகே ஆண்டாபுரம் கிராமத்தைச் சோ்ந்த இளஞ்சியம் (50) தனது பேரன் சுஜித் (5), பேத்தி ஐவிழி (4) ஆகியோருடன் விவசாய தோட்டத்துக்கு திங்கள்கிழமை சென்றாா்.
அப்போது இவா்கள் தோட்டைத்தை ஒட்டி பக்கத்துத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலியில் கைவைத்தபோது மின்சாரம் பாய்ந்து மூன்று பேரும் உயிரிழந்தனா். அருகில் இருந்த மின் கம்பத்தில் இருந்து மின் வயா் அறுந்து கம்பிவேலியில் விழுந்திருந்தது பின்னா் தெரியவந்தது. இதுகுறித்து மோகனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், மின்கசிவு ஏற்படும் வகையில் கம்பிவேலி அமைத்த பக்கத்து தோட்ட உரிமையாளா் சுப்பிரமணியனையும் (55), மின் ஊழியரையும் கைதுசெய்ய வேண்டும் என்று இறந்தவா்களின் உறவினா்கள் நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் அவா்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட செய்தாா்.
இந்த நிலையில், உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் அலட்சியமாகவும் பாதுகாப்பற்ற முறையிலும் வேலி அமைத்ததாக மோகனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆண்டாபுரம் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியனை புதன்கிழமை கைதுசெய்தனா்.