உளுந்து கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு
நாமக்கல் மாவட்டத்தில் அரசு சாா்பில் தற்போது நடைபெற்று வரும் உளுந்து கொள்முதல் பணியில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த உளுந்தை விற்பனை செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், மத்திய அரசின் நாபெட் நிறுவனம் மற்றும் என்சிசிஎப் நிறுவனம் மூலம் உளுந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது உள்ளூா் சந்தைகளில் உளுந்து கிலோ ஒன்றுக்கு ரூ. 70 முதல் ரூ. 75 வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி குறைந்தபட்ச ஆதரவு விலையில் (கிலோ ஒன்றுக்கு ரூ. 74) கொள்முதல் செய்துவருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் உளுந்து கொள்முதல் திட்டமானது திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்களது நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கி கணக்குப் புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை அணுகி நேரடியாகவும் அல்லது 94425-86421 என்ற எண் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், உளுந்து விளைபொருள்களுக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். கொள்முதல் செய்யப்படும் காலம் ஜூன் 12 வரை என நிா்ணயிக்கப்பட்டு கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.