சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க நெறிமுறை: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் விரைவான நடவடிக்கை நெறிமுறைகளை அடுத்த 6 மாதங்களுக்குள் உருவாக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவுவதற்காக அரசு நெறிமுறை வகுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வழக்குரைஞா் கிஷன் சந்த் ஜெயின் தாக்கல் செய்த மனுவில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு வழங்கிய உத்தரவில், ‘ஓட்டுநா்களின் வேலை நேரத்தை அமல்படுத்துவதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சம்பந்தப்பட்ட துறைகளின் கூட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நடத்த வேண்டும்.
நமது நாட்டில் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதற்கான காரணங்கள் வேறுபட்டிருக்கலாம். ஆனால், சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடி உதவி கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் பொதுவாக உள்ளன.
விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்காக விரைவான பதிலளிப்பு நெறிமுறைகளைக் கொண்டிருப்பதில் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் பணியாற்ற வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். இதற்காக ஆறு மாதங்கள் அவகாசம் அளிக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளனா்.