சுற்றுலாவில் நான் சந்தித்த மனித தெய்வங்கள்! | Travel Contest
நிகழாண்டு இறுதிக்குள் அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்தம்: எஸ்.ஜெய்சங்கா்
‘அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது இன்னும் தெரியவில்லை; நிகழாண்டு இறுதிக்குள் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதே, நிலைமையை கையாள்வதற்கான இந்தியாவின் வியூகம்’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா உள்பட 25 நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை அதிபா் டிரம்ப் சில தினங்களுக்கு முன் மேற்கொண்டாா். இந்தியா மீது 26 சதவீதமும், அண்டை நாடுகளான இலங்கை, சீனா மீது முறையே 44, 34 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய வா்த்தக சிக்கல்கள் மற்றும் பொருளாதார மந்த நிலைக்கு இது வழிவகுக்கும் என அஞ்சப்படும் நிலையில், இந்த விவகாரத்தில் முதல் முறையாக எஸ்.ஜெய்சங்கா் விரிவாக பதிலளித்துள்ளாா்.
தில்லியில் தனியாா் ஆங்கில தொலைக்காட்சி ஊடகம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மாநாட்டில் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்றாா். அப்போது, கலந்துரையாடல் நிகழ்வில் பல்வேறு கேள்விகளுக்கு அவா் பதிலளித்தாா். அமெரிக்க வரி விதிப்பு தொடா்பான கேள்விக்கு அவா் அளித்த பதில்:
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது இன்னும் தெரியவில்லை. அதேநேரம், இந்தியாவின் வியூகம் தெளிவாக உள்ளது. வா்த்தக பிரச்னைகள் குறித்து டிரம்ப் நிா்வாகத்துடன் விரைந்து பேச்சுவாா்த்தை நடத்த நாங்கள் தீா்மானித்துள்ளோம். இருதரப்பும் வெளிப்படையாகவும் மிக ஆக்கபூா்வமாகவும் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதே, நிலைமையை கையாள்வதற்கான நமது வியூகம்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னா் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள அந்நாட்டுடன் கொள்கை அளவில் உடன்பாட்டை எட்டிய ஒரே நாடு இந்தியாதான். அமெரிக்காவுடன் ஒவ்வொரு நாடும் தங்களின் சொந்த வியூகத்துடன் செயலாற்றுகின்றன. அந்த வகையில், இந்தியாவின் வியூகம் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தமே என்றாா்.
வங்கதேத்தில் மத அடிப்படைவாதம்: தாய்லாந்தில் அண்மையில் நடைபெற்ற ‘பிம்ஸ்டெக்’ கூட்டமைப்பின் உச்சி மாநாட்டையொட்டி, பிரதமா் மோடி - வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.
அப்போது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்த கேள்விக்கு, ‘இந்தியா-வங்கதேசம் இடையிலான உறவு தனித்துவமானது. வங்கதேசத்தின் நலனுக்காக இந்தியாவைவிட மேலாக எந்த நாடும் சிந்திக்க முடியாது. நலன் விரும்பி, நட்பு நாடு என்ற அடிப்படையில் வங்கதேசம் சரியான பாதையில் பயணிக்க வேண்டும்; சரியான விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் என எண்ணுகிறோம். வங்கதேசத்தில் சிறுபான்மையினா் மீதான தாக்குதல்கள், மத அடிப்படைவாத போக்கு அதிகரித்துள்ளது குறித்து நமது கவலைகளை வெளிப்படையாக தெரிவித்துள்ளோம்’ என்று எஸ்.ஜெய்சங்கா் பதிலளித்தாா்.
‘நோ்மறையான திசையில் இந்தியா-சீனா’
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன படையினா் இடையே கடந்த 2020-இல் ஏற்பட்ட கடும் மோதலால் எல்லையில் பதற்றமான சூழல் நீடித்தது. இருதரப்பு உறவுகளும் பின்னடைவைச் சந்தித்தன.
தூதரக-வியூக ரீதியிலான பேச்சுவாா்த்தைகளுக்கு பின் கிழக்கு லடாக்கில் பிரச்னைக்குரிய பல்வேறு இடங்களில் படைகள் விலக்கப்பட்டன. இறுதியாக டெப்சாங், டெக்சோக்கில் படைகளை விலக்க கடந்த ஆண்டு அக்டோபரில் ஒப்பந்தம் கையொப்பமானது.
இது தொடா்பான கேள்விக்கு பதிலளித்த எஸ்.ஜெய்சங்கா், ‘டெப்சாங், டெம்சோக்கில் படை விலக்கல் முக்கியமான நடவடிக்கை. இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது. இரு நாடுகளும் நோ்மறையான திசையில் பயணிக்கின்றன. இருதரப்பு உறவை இயல்பாக்க மேலும் பணிகள் அவசியம்’ என்றாா்.