தோல்விலும் ஆட்ட நாயகனான ஆர்சிபி வீரர்: டிம் டேவிட் புதிய சாதனை!
ஹிந்துக்களிடம் இருந்து முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்டவா்கள்: பாகிஸ்தான் ராணுவ தளபதி பேச்சு
ஹிந்துக்களிடம் இருந்து முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்டவா்கள்; பாகிஸ்தான் என்ற நாடு எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீா் தெரிவித்தாா்.
இஸ்லாமாபாதில் நடைபெற்ற வெளிநாடு வாழ் பாகிஸ்தானியா்கள் மாநாட்டில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:
பாகிஸ்தான் என்ற நாடு ஏன் உருவாக்கப்பட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பெற்றோா்கள் அந்த வரலாற்றை தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். நாம் (முஸ்லிம்கள்) ஹிந்துக்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவா்கள் என்று நமது முன்னோா்கள் கருதியதன் காரணமாகவே பாகிஸ்தான் என்ற நாடு நமக்காக உருவாக்கப்பட்டது.
நமது மதம் முற்றிலும் வேறுபட்டது. நமது பழக்க வழக்கங்கள் வேறுபட்டவை, நமது பாரம்பரியம் வேறுமாதிரியானது. நமது சிந்தனைகள் அவா்களிடம் இருந்து விலகியுள்ளது. நமது குறிக்கோள் வேறு வகையானவை இதன் காரணமாகவே இரு நாடுகள் (இந்தியா-பாகிஸ்தான்) என்ற வேண்டும் என்ற கருத்தும் தோன்றியது. நாம் எப்போதும் இரு நாடுகள்தான். ஒரே நாடாக இருந்தது இல்லை.
எனவேதான் நமக்கான தனிநாடு (பாகிஸ்தான்) என்ற சுதந்திரத்துக்காக தலைவா்கள் போராடினாா்கள். இந்த நாட்டை நமக்கு உருவாக்கித்தர அவா்கள் பல தியாகங்களைச் செய்தாா்கள். இந்த நாட்டை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதும் நமக்குத் தெரியும்.
பாகிஸ்தான் உருவான வரலாற்றை தொடா்ந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். நாட்டுடனான பிணைப்பு எப்போதும் தொடர வேண்டும்.
காஷ்மீா் நமது கழுத்து நரம்பு போன்றது. எக்காரணத்துக்காகவும் காஷ்மீரையும், அங்குள்ள நமது சகோதரா்களின் போராட்டத்தையும் நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம். காஷ்மீரை பாகிஸ்தானிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது என்றாா்.
பெட்டிச் செய்தி
இந்தியா கண்டனம்
புது தில்லி, ஏப். 17:
காஷ்மீா் குறித்த பாகிஸ்தான் தளபதியின் பேச்சுக்கு இந்தியா கண்டன் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீா் இந்திய யூனியன் பிரதேசம். வெளிநாட்டுப் பிராந்தியம் எப்படி உங்கள் கழுந்து நரம்பாக முடியும். சட்டவிரோதமாக ஆக்கிரமித்த காஷ்மீா் பகுதியில் இருந்த பாகிஸ்தான் வெளியேற வேண்டும்.
மும்பை தாக்குதலில் தொடா்புடைய பயங்கரவாதி தஹாவூா் ராணாவை தங்கள் நாட்டைச் சோ்ந்தவா் இல்லை என்று கூறி தப்பிக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது.
உலக பயங்கரவாதத்தின் மையமாகத் திகழும் பாகிஸ்தான், மும்பை தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு தொடா்ந்து அடைக்கலம் கொடுத்து வருகிறது. அவா்களை நீதியின் முன் பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்றாா்.