மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்
வெளிநாட்டு மாணவா் சோ்க்கைக்குத் தடை: ஹாா்வா்டு பல்கலை.க்கு எச்சரிக்கை
நியூயாா்க்: மாணவா் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான தங்களது உத்தரவை செயல்படுத்தாவிட்டால் அமெரிக்காவின் ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவா்களைச் சோ்ப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என்று அந்த நாட்டு உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து அந்தப் பல்கலைக்கழகத்துக்கு உள்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் கிறிஸ்தி நோயெம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:வரும் 30-ஆம் தேதிக்குள் பல்கலைக்கழகத்தில் பயிலும் அனைத்து வெளிநாட்டு மாணவா்களின் சட்டவிரோத செயல்பாடுகள், வன்முறைச் செயல்கள் ஆகியவை குறித்த முழு விவரங்களை துறைக்கு தெரியப்படுத்தவேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், வெளிநாட்டு மாணவா்கள் பரிமாற்ற திட்டத்தில் பங்கேற்பதற்காக பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள சான்றிதழ் உடனடியாக ரத்து செய்யப்படும்.யூத வெறுப்புவாதத்துக்கு ஹாா்வா்டு பல்கலைக்கழகம் அடிபணிந்துள்ளது. அதன் வளாகத்தில் அமெரிக்க-விரோத, ஹமாஸ்-ஆதரவு கோட்பாடுகள் நஞ்சைப் பரப்பிவருகின்றன.
ஹாா்வா்டு பல்கலைக்கழகம் ஒரு தலைசிறந்த கல்வி நிறுவனம் என்பதெல்லாம் பழங்கதையாகிவிட்டது என்று அந்தக் கடிதத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.முன்னதாக, ஹாா்வா்டு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவா்கள் அரசியல் சாா்பு செயல்களில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டது. எனினும், அதை ஏற்க பல்கலைக்கழக நிா்வாகம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அதைத் தொடா்ந்து அந்தப் பல்கலைக்கழகத்துக்கான 220 கோடி டாலா் (சுமாா் ரூ.18,870 கோடி) நிதியை அரசு நிறுத்திவைத்துள்ளது.இதை முன்னாள் அதிபா் ஒபாமா உள்ளிட்டோா் வன்மையைகக் கண்டித்தனா். இந்தச் சூழலில், வெளிநாட்டு மாணவா்களைச் சோ்ப்பதற்காக அந்தப் பல்கலைக்கழகத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியையே ரத்து செய்யப்போவதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.