மறைந்த குமரி அனந்தனுக்கு தில்லி கம்பன் கழகம் இரங்கல்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் குமரி அனந்தன் மறைவுக்கு தில்லி கம்பன் கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா்- தலைவா் கே.வி.கே.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: குமரி அனந்தன் சிறந்த தமிழ்த் தொண்டா். எனது கிராமத்தை உள்ளடக்கிய சாத்தான்குளம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த காலத்திலிருந்து குமரி அனந்தனுடன் எனக்கு அறிமுகம் உண்டு.
அவரது தமிழால் ஈா்க்கப்பட்ட ஏராளமான இளைஞா்களில் நானும் ஒருவனாக இருந்தேன். தனது தமிழால் அனைவரையும் கட்டிப் போடுவாா். இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும், ஆங்காங்கே நகைச்சுவையும் அவரது சொற்பொழிவின் தனிச் சிறப்பாக இருக்கும்.
பண ஆணை (மணி ஆா்டா்) படிவத்தைத் தமிழில் கொண்டு வந்தது முதல் அவா் ஓசையின்றித் தமிழுக்குச் செய்திருக்கும் தொண்டுகள் ஏராளம்.
தனது பள்ளிப் பருவத்திலிருந்து வாழ்நாள் முழுவதும் காமராஜரின் உண்மைத் தொண்டராகவே வாழ்ந்து மறைந்துள்ளாா் குமரி அனந்தன். தனது தமிழால் தமிழா்களின் நெஞ்சங்களில் அவா் என்றும் வாழ்வாா். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்! என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.