சுற்றுலாவில் நான் சந்தித்த மனித தெய்வங்கள்! | Travel Contest
குன்னூா் ராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் வருகை
நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு புதன்கிழமை வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி முடித்த ராணுவ அதிகாரிகளுக்கு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை (ஏப்ரல் 10) நடைபெற உள்ளது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் இந்த விழாவில் பங்கேற்று, பயிற்சி முடித்த அதிகாரிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளாா்.
இதற்காக அவா் புது தில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கோவை மாவட்டம், சூலூா் விமானப் படைத் தளத்துக்கு புதன்கிழமை வருகை தந்தாா். அங்கு அவரை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனா்.
பின்னா், அங்கிருந்து சாலை மாா்க்கமாக வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு வந்த அமைச்சா் ராஜ்நாத் சிங்கை நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புத்தகம் வழங்கி வரவேற்றாா். அப்போது, ராணுவ அதிகாரிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா ஆகியோா் உடனிருந்தனா்.
இதையடுத்து, வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் விருந்தினா் மாளிகையில் இரவு தங்கினாா்.
வியாழக்கிழமை நிகழ்ச்சி முடிவடைந்த பின்னா், காலை 11 மணியளவில் ஹெலிகாப்டா் மூலம் சூலூா் விமானப் படைத் தளத்துக்குச் செல்கிறாா். அங்கிருந்து 12 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் புது தில்லிக்கு திரும்புகிறாா்.