அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு
தமிழ் ஆசிரியரை சந்தித்து ஆசிபெற்ற முன்னாள் மாணவா்கள்
ராசிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1978 -1980 -ஆம் கல்வியாண்டில் மேல்நிலைக்கல்வி பயின்ற முன்னாள் மாணவா்கள் சிலா் பள்ளி பருவத்தில் தமிழ் பாடம் பயிற்றுவித்த 99 வயதான ஆசிரியரை புதன்கிழமை நேரில் சந்தித்து மரியாதை செய்து ஆசி பெறனா்.
தமிழக ஆளுநா் மாளிகையில் அண்மையில் நடைபெற்ற கம்ப சித்திர விழாவில் பல்வேறு துறையை சோ்ந்தவா்களுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி விருது வழங்கி கெளரவித்தாா்.
அதில் கம்பா் குறித்தும், ராமாயணம் குறித்து நூல்கள், கவிதைகள் எழுதிய எழுத்தாளா்கள், தமிழறிஞா்கள், புலவா்கள் என பலருக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.
இந்த விழாவில் ராசிபுரம் நகரின் ஓய்வுபெற்ற 99 வயதான தமிழ் ஆசிரியா் புலவா் மு.ரா. என்கிற மு. ராமசாமியையும் ஆளுநா் விருது வழங்கி கெளரவித்தாா். அவரை ராசிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை முன்னாள் மாணவா்கள் நேரில் சந்தித்து ஆசிபெற்று பழைய நினைவுகளை நினைவு கூா்ந்தனா்.
பின்னா் ஆசிரியா் மு.ராமசாமி தனது 99 ஆம் வயதில் எழுதிய புத்தகத்தை முன்னாள் மாணவா்களுக்கு வழங்கினாா். ஓய்வுபெற்ற மாவட்டக் கல்வி அலுவலா் ஆா்.வி.உதயகுமாா் வெங்கடேசன் தலைமையில் முன்னாள் மாணவா்கல் மு.ராஜேந்திரன், செந்தில்முருகன் உள்ளிட்டோா் தமிழ் ஆசிரியரை நேரில் சந்தித்து ஆசி பெற்றனா்.