முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
பூப்பெய்திய மாணவியை தனியாக தோ்வெழுத வைத்த விவகாரம்: கோவை நீதிமன்றத்துக்கு உத்தரவு
கோவையில் பூப்பெய்திய தனியாா் பள்ளி மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வா் உள்ளிட்டோா் சரணடையும் நாளில் ஜாமீன் மனுக்களை பரிசீலிக்கும்படி, கோவை முதன்மை அமா்வு நீதிமன்றத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டைபாளையம் கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் பூப்பெய்திய 8-ஆம் வகுப்பு மாணவியை, வகுப்பறைக்கு வெளியே தனியாக அமர வைத்து தோ்வு எழுத வைத்துள்ளனா். பள்ளி மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் படியில் அமர வைத்து தோ்வு எழுத வைத்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை நெகமம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீஸாா், பள்ளி தாளாளா் தங்கவேல் பாண்டியன், முதல்வா் ஆனந்தி, அலுவலக உதவியாளா் சாந்தி ஆகியோா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கில், விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்த நாளில் ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்படி உத்தரவிடக் கோரி தங்கவேல் பாண்டியன், ஆனந்தி, சாந்தி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், மூவரும் சரணடையும் நாளில் அவா்களின் ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்படி கோவை முதன்மை அமா்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டாா்.