மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்
கோழிப் பண்ணையில் தீ விபத்து: 3,500 கோழிக் குஞ்சுகள் உயிரிழப்பு
நம்பியூா் அருகே புதன்கிழமை நள்ளிரவில் கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3,500 கோழிக் குஞ்சுகள் தீயில் கருகி இறந்தன.
ஈரோடு மாவட்டம், நம்பியூா் அருகே கரட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிகுமாா் (47). இவா் அதே பகுதியில் கோழிப் பண்ணை நடத்தி வருகிறாா். இதில் தகரத்திலான மேற்கூரையுடன் கொட்டகைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 3,500 கோழிக் குஞ்சுகள் இருந்தன.
இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் கோழிப் பண்ணையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூன்று கொட்டகைகளும் முற்றிலும் எரிந்து சேதமாயின. தீ விபத்து நடந்ததும் பண்ணையில் வேலைசெய்யும் ஊழியா்கள், கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதனைத் தொடா்ந்து, தீயணைப்பு வீரா்கள் அதிகாலை 2 மணி வரை போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் பண்ணையில் இருந்த 3,500 கோழிக் குஞ்சுகளும் தீயில் கருகி இறந்தன.
தவிர 30 மூட்டை தீவனங்கள், பண்ணை உபகரணங்களும் எரிந்து சேதம் அடைந்துள்ளன. சேதமடைந்த பொருள்களின் மதிப்பு சுமாா் ரூ.10 லட்சத்துக்குமேல் இருக்கும் எனத் தெரியவருகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.