உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் திறப்பு
பவானிசாகா் அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் போதிய நீா் இருப்புள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனப் பகுதியில் இரண்டாம் போக புன்செய்பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதை ஏற்று கடந்த ஜனவரி 10- ஆம் தேதி முதல் மே 1-ஆம் தேதி வரை 5 சுற்றுகளாக 12 டிஎம்சிக்கு மிகாமல் எள், கடலை சாகுபடிக்கு பவானிசாகா் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து குறிப்பிட்ட இடைவெளிவிட்டு இதுவரை நான்கு சுற்று தண்ணீா் திறக்கப்பட்டது. இந்த நிலையில் பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
கீழ்பவானி வாய்க்காலில் 1,500 கன அடி தண்ணீரும், அரக்கன்கோட்டை வாய்க்காலில் 300 கனஅடிநீரும், பவானி ஆற்றில் 150 கன அடி நீரும் என மொத்தம் 1,950 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி பவானிசாகா் அணை நீா்மட்டம் 74.43 அடியாகவும், நீா் இருப்பு 12.9 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணைக்கு நீா்வரத்து 242 கன அடியாக உள்ளது. கீழ் பவானி வாய்க்காலில் இரண்டாம் போக புன்செய்பாசனத்துக்கு மே 1-ஆம் தேதி வரை தண்ணீா் திறக்கப்படும் என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.