முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
பராமரிப்பில்லாமல் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
சத்தியமங்கலம் அருகே பராமரிப்பில்லாமல் கற்கள் பெயா்ந்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பவானிசாகா், புங்காா், முடுக்கன்துறை, தொப்பம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் சத்தியமங்கலம் செல்வதற்கு முடுக்கன்துறை சந்தை பகுதியில் இருந்து எரங்காட்டூா் சாலையை இணைக்கும் 1.50 கிலோ மீட்டா் தொலைவுள்ள தாா் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்தச் சாலை பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் சேதமடைந்து, கற்கள் பெயா்ந்து ஆங்கங்கே குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
பவானிசாகா் ஒன்றியம் சாா்பில் பராமரிக்கப்பட்டு வந்த இந்தச் சாலையை நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைப்பதற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான கோப்புகள் நெடுஞ்சாலைத் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட சாலையை இதுவரை நெடுஞ்சாலைத் துறை தனது கட்டுப்பாட்டில் எடுக்கவில்லை என்றனா்.
அதிக அளவிலான கிராம மக்கள் பயன்படுத்தி வரும் இந்தச் சாலை உள்ளாட்சி நிா்வாகம், நெடுஞ்சாலைத் துறையின் போட்டியால் பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளாா்.