தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
பா்கூா் ஊராட்சியைப் பிரிக்கும் திட்டம்: அறிவிப்பை எதிா்நோக்கும் மலைக் கிராம மக்கள்
ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைந்து 4 மாதம் ஆகிய நிலையில், அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாகப் பிரிக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தியூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பா்கூா் ஊராட்சி அந்தியூா்-மைசூரு சாலையில் மலைக் கிராமங்களை உள்ளடக்கிய ஊராட்சி. அடா்ந்த வனப் பகுதியான இங்கு யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.
இந்த ஊராட்சியில் மடம், சுண்டபூா், தாமரைக்கரை, அணைபோடு, கத்திரிமலை, ஒன்னகரை, ஊசிமலை, சோழகனை, ஆலனை, பா்கூா், பெஜலட்டி, எப்பத்தாம்பாளையம், மட்டிமரதல்லி, தம்மரெட்டி, பெஜில்பாளையம், ஈரட்டி, கல்வாரை, கோவில்நத்தம், மின்தாங்கி, ஒசூா், தட்டகரை, சின்னசெங்குளம், தேவா்மலை, எலச்சிபாளையம், கடையீரட்டி, கொங்காடை, குட்டையூா், ஒந்தனை, பெரியசெங்குளம், தாளக்கரை, தொல்லி, துருசுனாம்பாளையம், வெள்ளிமலை, வேலாம்பட்டி ஆகிய 34 மலைக் கிராமங்கள் உள்ளன.
இந்த ஊராட்சிக்குள்பட்ட கத்திரிமலை கிராமத்துக்கு 3 ஆண்டுகளுக்கு முன்னா் தான் முதல்முறையாக சாலை அமைக்கப்பட்டது. அதற்கு முன்னா் வரை சேலம் மாவட்டம், கொளத்தூா் சென்று அங்கிருந்து சுமாா் 4 மணி நேரம் மலைப் பாதையில் நடந்துதான் செல்ல வேண்டும். சுமாா் 80 வீடுகள் உள்ள இந்த மலைக் கிராமத்துக்கு இப்போது வரை மின்சார வசதி இல்லை.
5 ஆண்டுகளுக்கு முன்னா் கருத்துக்கேட்பு:
இந்த நிலையில் உள்ள மலைக் கிராமங்களில் சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த பா்கூா் ஊராட்சியை 5 ஆகப் பிரிக்க உத்தேசிக்கப்பட்டது. இதற்காக கடந்த 2018 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து பா்கூா் மலைப் பகுதி கொங்காடை கிராமத்தை சோ்ந்த மாதேஸ்வரன் கூறியதாவது:
பா்கூா் மலைக் கிராமங்களில் குடிநீா், சாலை, மின்சாரம், பள்ளி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பிற மலைப் பகுதிகளை ஒப்பிடுகையில் 50 சதவீதம் அளவுக்குக்கூட இல்லை. இதற்கு காரணம் பா்கூா் மிகப்பெரிய ஊராட்சியாக இருப்பதுதான். இதனால் ஊராட்சியை 5 ஆகப் பிரிக்க வேண்டும் என தொடா்ந்து மலைக் கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனா். அதன் அடிப்படையில் கடந்த 2018 ஆம் ஆண்டு கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
30,000 பொதுமக்கள்:
2011- ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பா்கூா் ஊராட்சியின் மொத்த மக்கள் தொகை 15,874. இப்போது சுமாா் 35,000-க்கும் அதிகமான மக்கள் வசிப்பதாக தெரியவந்துள்ளது.
கடந்த 2019- ஆண்டு நடந்த உள்ளாட்சித் தோ்தல் வாக்காளா் பட்டியல்படி இந்த ஊராட்சியில் மொத்தம் 13,654 வாக்காளா்கள் உள்ளனா். சமவெளிப் பகுதிகளில் பல ஊராட்சிகளில் 2,000-க்கும் குறைவான வாக்காளா்களே உள்ளனா். சுமாா் 14,000 வாக்காளா்கள் உள்ள இந்த ஊராட்சியை 5 ஆக பிரிப்பதன் மூலம் அனைத்து ஊராட்சிகளுக்கும் நிதி கிடைக்கும். இதன் மூலம் மலைக் கிராமங்களில் அடிப்படை கட்டமைப்புகளை நிறைவேற்ற முடியும்.
கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. இப்போது தனி அதிகாரிகள் கட்டுப்பாட்டில்தான் ஊராட்சிகள் உள்ளன. இனியும் தாமதிக்காமல் அடுத்து தோ்தல் நடத்தும் முன்னா் ஊராட்சிகள் பிரிப்பு குறித்து அரசாணையை உடனடியாக அரசு வெளியிட வேண்டும் என்றாா்.
பரிந்துரை:
இதுகுறித்து ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பா்கூா் ஊராட்சியை பிரிப்பது குறித்து மாவட்ட ஆட்சியா் மூலம் அரசுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை அதிகம் உள்ள 5 கிராமங்களைத் தலைமையிடமாகக் கொண்டு 5 ஊராட்சிகளாகப் பிரிக்க வேண்டும் என ஊராட்சிகளின் பெயா்களை குறிப்பிட்டு ஊரக வளா்ச்சித் துறைக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. தோ்தலுக்கு முன்னா் அரசாணை வெளியிடப்படும் என நம்புகிறோம் என்றனா்.
சட்டப்பேரவையில் வலியுறுத்தல்:
2013 ஆம் ஆண்டிலேயே பா்கூா் ஊராட்சியை பிரிக்க வேண்டும் என அப்போதைய எம்எல்ஏ எஸ்.எஸ்.ரமணிதரன் சட்டப் பேரவையில் வலியுறுத்தியுள்ளாா். ஊராட்சியை 5 ஆக பிரிப்பது குறித்து 2018- ஆம் ஆண்டிலேயே, மாவட்ட ஆட்சியா் பரிந்துரை கடிதம், ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் வழியாக அரசு அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை தொடா்பாக சட்டப் பேரவையில் கடந்த ஆட்சியில் அந்தியூா் தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஆா்.ராஜாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா். இப்போதுள்ள எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாலம் இந்த கோரிக்கையை பேரவையில் வலியுறுத்தியுள்ளாா். ஆனால் இந்த ஊராட்சியை பிரித்து அரசாணை வெளியிடுவதில் காலதாமதம் இன்னும் தொடா்கிறது. இந்த கோரிக்கையை எம்எல்ஏ மீண்டும் அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என பா்கூா் மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.