மின்தடையை சரிசெய்ய லஞ்சம்: மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம்
தாளவாடியில் மின்தடையை சரிசெய்வதற்கு விவசாயிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி பாரதிபுரத்தைச் சோ்ந்த விவசாயி செந்தில் என்பவரிடம் மின்தடையை சரிசெய்வதற்காக தாளவாடி மின்வாரிய ஊழியா் மணிகண்டன் ரூ.1,500 லஞ்சம் கேட்டு, ரூ.1,000 பெற்றதுடன் மேலும் ரூ.500 கேட்கும் விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில், மின்வாரிய ஊழியா் லஞ்சம் வாங்கும் விடியோ குறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், ஊழியா் மணிகண்டன் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மின்வாரிய ஊழியா் மணிகண்டனை பணியிடை நீக்கம் செய்து மின்வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டனா். இதுதொடா்பான விவரத்தை ‘எக்ஸ்’ பக்கத்தில் மின்வாரியம் பதிவிட்டுள்ளது.
இதில், மின்தடை புகாா் மீது நடவடிக்கை எடுக்காதது, லஞ்சம் வாங்குவது, மின் கட்டண வசூலில் முறைகேடு, அலுவலகத்துக்கு சரியாக வராதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின்வாரிய ஊழியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனா்.
இத்தகவலை பலரும் பாா்க்கும் வகையில் ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டு வருவதாகவும், தவறு செய்தால் தங்களுக்கும் இதேநிலை வரும் என்று கருதி மற்றப் பணியாளா்கள் லஞ்சம் வாங்குவது, வேலையில் அலட்சியம் போன்ற செயல்களில் ஈடுபடமாட்டாா்கள் என அதில் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.