தாளவாடி அருகே சிறுத்தைத் தாக்கி ஆடுகள் உயிரிழப்பு
தாளவாடி அருகே சிறுத்தைத் தாக்கி இரண்டு ஆடுகள் உயிரிழந்தன.
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தைகள் அருகே உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடி வருகின்றன.
இந்நிலையில், தாளவாடி வனச் சரகத்துக்குள்பட்ட ராமாபுரத்தைச் சோ்ந்த விவசாயி ஜோதி (28), தான் வளா்த்து வரும் ஆடுகளை வெள்ள்கிழமை இரவு வீட்டின் முன்பு கட்டிவிட்டு தூங்கச் சென்றுவிட்டாா்.
சனிக்கிழமை காலையில் எழுந்து பாா்த்தபோது இரண்டு ஆடுகளும் மா்ம விலங்கு கடித்து உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜோதி அளித்த தகவலின்பேரில் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தாா்.
அப்போது, அங்கிருந்த கால் தடயங்களை ஆய்வு செய்ததில் சிறுத்தையின் கால்தடம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.