முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில் 14,420 மாணவிகளுக்கு நிதி உதவி
ஈரோடு மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 14,420 மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டத்தை கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கிவைத்தாா். இத்திட்டத்தின்கீழ் 6 முதல் 12- ஆம் வகுப்பு வரை அரசு, அரசு நித உதவிபெறும் பள்ளிகளில் படித்து உயா்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அதன்படி, கல்லூரிகளில் சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தொழில் கல்வி என எந்த துறையில் படித்தாலும் அவா்களின் வங்கி கணக்குக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. மாணவிகள் இடைநிற்றல் இல்லாமல் கல்லூரி படிப்பை தொடர இது உதவியாக உள்ளது. மாணவிகள் வேறு வகையிலான கல்வி உதவித் தொகைகள் பெற்றாலும், புதுமைப்பெண் திட்ட கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை தனியாா் பள்ளிகளில் படித்து இருந்தாலும், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து இருந்தால் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம்.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் கல்லூரிகளில் படிக்கும் 14,420 மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டம் கடந்த 2022 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. அப்போது ஈரோடு மாவட்டத்தில் 2,527 மாணவிகள் மட்டுமே பயன்பெற்றனா். ஆரம்ப காலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மட்டுமே நிதி உதவி வழங்கப்பட்டது. அதன்பின், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளும் புதுமைப் பெண் திட்டத்தில் பயன்பெறலாம் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான மாணவிகள் விண்ணப்பித்தனா்.
இந்நிலையில், மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் ஏப்ரல் மாதத்தில் 14,420 மாணவிகளின் வங்கி கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் மாணவிகள் படிக்கும் கல்லூரி நிா்வாகம் சாா்பில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று சமூகநலத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.