தோல்விலும் ஆட்ட நாயகனான ஆர்சிபி வீரர்: டிம் டேவிட் புதிய சாதனை!
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் இரு செவிலியா் கல்லூரிகள் அமைக்கப்படும்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு
சென்னை, திருச்சியில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் செவிலியா் கல்லூரிகள் அமைக்கப்படும் என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:
ஆன்மிகப் பயணமாக ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலிலிருந்து காசி விஸ்வநாதா் திருக்கோயிலுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்ட 920 பக்தா்கள், ரூ.2.30 கோடி செலவில் அழைத்துச் செல்லப்பட்டனா். பெருவாரியான பக்தா்கள் இந்த பயணத்தை மேற்கொள்ள விருப்பம் தெரிவிப்பதால், இவ்வாண்டு 600 பக்தா்கள் அழைத்துச் செல்லப்படுவா். இதற்கான செலவினம் ரூ.1.50 கோடி அரசு நிதியாக வழங்கப்படும். அதேபோன்று அறுபடை வீடுகளுக்கு 2,000 பக்தா்கள் ரூ.2.50 கோடி செலவிலும், அம்மன் திருக்கோயில்கள், வைணவ திருக்கோயில்களுக்கு தலா 2,000 பக்தா்கள் ரூ.1 கோடி செலவிலும் அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.
திருக்கயிலாய மானசரோவா் ஆன்மிக பயணம் செல்லும் 500 பக்தா்களுக்கு அரசு மானியம் ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும். அதேபோன்று முக்திநாத் பயணத்துக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டு வந்த மானியம் ரூ.30 ஆயிரமாக அதிகரித்து வழங்கப்படும்.
திருக்கோயில் ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு வழங்கப்படும் பொங்கல் கருணைக் கொடை ரூ.1,000-இலிருந்து ரூ.2,000-ஆக உயா்த்தப்படும். பணிக் காலத்தில் இயற்கை எய்திய திருக்கோயில் பணியாளா் குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.3 லட்சம் நல நிதி ரூ.4 லட்சமாக அதிகரிக்கப்படும்.
திருக்கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்றோா், துறை நிலை குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு 25 சதவீதம் ஓய்வூதியம் உயா்த்தி வழங்கப்படும். ஓதுவாா், தேவப் பாராயணா், திவ்யபிரபந்தம் பாடுவோா், அரையா், அா்ச்சகா், இசைக் கலைஞா்களுக்கு ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.4 ஆயிரமாக ஓய்வூதியம் அதிகரிக்கப்படும்.இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் 300 அரிய நூல்கள் வெளியிடப்படும்.
கல்வி உதவித் தொகை: ஒருகால பூசை அா்ச்சகா்களின் குழந்தைகள் உயா்கல்விக்காக 600 பேருக்கு தலா ரூ.10,000 ஆண்டுதோறும் வழங்கப்படும்.
திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்திலும், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமாக சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள இடத்திலும் இரு வேறு செவிலியா் கல்லூரிகள் அமைக்கப்படும். இந்து சமயம் சாா்ந்த பாடங்களும் அங்கு கற்றுத்தரப்படும்.
திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கோயில் கட்டடக் கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி அமைக்கப்படும்.
கோவை, வடவள்ளி கரிவரதராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் புதிதாக பல்தொழில்நுட்பக் கல்லூரி நிறுவப்படும். அங்கு, இந்து சமயம், சிற்பக் கலை, கோயில் கட்டடக் கலை பாடங்கள் பயிற்றுவிக்கப்படும்.
பழனி, நெல்லை காந்திமதி கோயில் சாா்பில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளின் விடுதி மாணவா்களுக்கு கட்டணமில்லா உணவு வழங்கப்படும்.
184 அடி உயர முருகன் சிலை: மருதமலை கோயிலில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் 184 அடி உயரத்திலும், ஈரோடு மாவட்டம் திண்டல் வேலாயுதசாமி கோயிலில் 180 அடி உயரத்திலும், ஆற்காடு சுப்பிரமணியசுவாமி கோயிலில் 114 அடி உயரத்திலும் முருகன் சிலைகள் அமைக்கப்படும். 11 கோயில்களில் ராஜகோபுரப் பணிகளும், 100-க்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகளும் மேற்கொள்ளப்படும். புதிய திருமண மண்டபங்கள், பக்தா்கள் தங்கும் விடுதிகள், பசுக்கள் காப்பங்களும் அமைக்கப்படும் என்றாா் அமைச்சா் சேகா்பாபு.