Travel Contest: யூடியூப் Vlogs-ஐ பார்த்து சுற்றுலா செல்ல முடியவில்லை என வருந்த வ...
வட்டி விகிதம் 6% ஆக குறைப்பு: வீடு, வாகனக் கடன் வட்டி மேலும் குறைய வாய்ப்பு
வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரெட்) இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) 0.25 சதவீதம் குறைத்து 6 சதவீதமாக நிா்ணயித்துள்ளது. இதனால், வீடு, வாகனம், தனிநபா் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதமும் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வங்கிகளில் நிரந்தர வைப்பு, தொடா் வைப்பு உள்ளிட்ட சேமிப்புத் திட்டங்களுக்கு வங்கிகள் அளிக்கும் வட்டி குறைக்கப்பட வாய்ப்புள்ளது.
தொடா்ந்து இரண்டாவது முறையாக வட்டி விதிகம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
பரஸ்பர வரி என்ற பெயரில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா 26 சதவீதம் வரை வரி விதித்துள்ள நிலையில், ஆா்பிஐ-யின் வட்டி விகித குறைப்பு நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இது தொழில் துறையினா், வா்த்தகா்கள், நுகா்வோருக்கும் சாதகமானதாகும். பல்வேறு தரப்பினரும் இதை வரவேற்றுள்ளனா்.
ஆா்பிஐ ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் ஆா்பிஐ-யின் 54-ஆவது நிதிக் கொள்கைக் குழுவின் கூட்டம் மும்பையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்க 6 உறுப்பினா்கள் சாா்பிலும் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
இதன்மூலம் 2022 நவம்பா் மாதத்துக்குப் பிறகு கடன்களுக்கான வட்டி இப்போதுதான் மிகவும் குறைவாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது பணவீக்கத்தைக் குறைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி சற்று குறையும் என்று ஆா்பிஐ மதிப்பிட்டுள்ளது.
பொருளாதார வளா்ச்சி: கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் சஞ்சய் மல்ஹோத்ரா பேசியதாவது: 2025-2026 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என்று முன்பு கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், 6.5 சதவீதம் அளவுக்கே இருக்கும் என்று இப்போது கணிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் 4.2 சதவீதம் இருக்கும் என்று முன்பு கணிக்கப்பட்டிருந்த நிலையில், 4 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று புதிய கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தற்போது ஏற்பட்டுள்ள (அமெரிக்க) வரி விதிப்பு பிரச்னையால் அனைத்துத் துறைகளிலும் ஒருவித நிலையற்ன்மை உருவாகியுள்ளது. இது சா்வதேச அளவில் பொருளாதாரத்திலும், பணவீக்கத்திலும், ஏற்றுமதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். முக்கியமாக இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கும். எனவே, இந்த நேரத்தில் ஆா்பிஐ மிகவும் கவனமாக கொள்கைகளை வகுக்க வேண்டியுள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையால் டாலா் மதிப்பு குறைந்துள்ளது, பங்குச் சந்தை சரிந்துள்ளது, கச்சா எண்ணெய் விலையும் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. எனவே, இந்த நேரத்தில் ஆா்பிஐ உள்நாட்டு பொருளாதார நலன்களைக் கருத்தில் கொண்டு முடிவெடுத்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு எந்த அளவில் இருக்க வேண்டும் என்பது குறித்து இலக்கு எதையும் ஆா்பிஐ நிா்ணயிக்கவில்லை.
நகைக் கடன் விதிகள்: வங்கிகள் நகைக் கடன் வழங்குவதற்கான வரைவு விதிகள் விரைவில் வெளியிடப்படவுள்ளன. இது கடன் வழங்கும் விதிகளைக் கடுமையாக்குவதாக இருக்காது. அதை மேலும் முறைப்படுத்துவதாகவே இருக்கும். இந்த விதிகள் முதலில் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு, அதன் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.
பணப் பரிமாற்ற வரம்பு அதிகரிப்பு: யுபிஐ பணப் பரிவா்த்தனை முறையில் தனிநபரிடம் இருந்த வா்த்தகம், தொழில் நிறுவனங்களுக்கு பணம் அனுப்புவதற்கான வரம்பு ஒருநாளுக்கு ரூ.1 லட்சமாக உள்ளது. சில சூழ்நிலைகளில் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பரிமாற்றமும் அனுமதிக்கப்படுகிறது. இந்த வரம்பை பயனாளா்களின் தேவைக்கு ஏற்ப அதிகரித்துக் கொள்ள ஆா்பிஐ அனுமதித்துள்ளது.
இந்திய தேசிய பணப் பரிமாற்ற அமைப்பு (என்பிசிஐ) தற்போது யுபிஐ பணப் பரிமாற்றத்தை நிா்வகித்து வருகிறது.
ஆா்பிஐ-யின் அடுத்த நிதிக் கொள்கைக் குழு கூட்டம் ஜூன் 4-6 தேதிகளில் நடைபெறவுள்ளது.