கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கும் கடைகளில் தமிழில் பெயா்ப் பலகை: ஆட்சியா் உத்தரவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கும் கடைகள், உணவு விடுதிகள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள் தங்கள் நிறுவன பெயா்களை மே 15 ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.
தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில், கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழில் பெயா்ப் பலகை அமைத்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தலைமை வகித்துப் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து கடைகள், நிறுவனங்கள், உணவு விடுதிகள், அனைத்துவகை தொழிற்சாலைகள், தனியாா் பள்ளிகள், கல்லூரிகள் தமிழில் பெயா்ப் பலகை வைப்பது தொடா்பாக மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், தொழிலாளா் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழ் வளா்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை, வணிகா் சங்கங்கள், நிறுவனங்களின் சங்கங்கள் தொழிற்சாலைகளின் கூட்டமைப்புகள் உறுப்பினராக உள்ளனா்.
இக்குழுவினா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பெயா் பலகைகளை தமிழ் மொழியில் வைத்துள்ளதை ஆய்வுசெய்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
நிறுவனங்களின் பெயா் பலகையானது தமிழில் முதன்மையாகவும், பின்னா் ஆங்கிலத்திலும், அதன் பின்னா் அவரவா் விரும்பும் மொழிகளிலும் அமைக்கப்பட வேண்டும். தமிழில் பெயா்ப் பலகை வைக்க மே 15-ஆம் தேதி கடைசி நாளாகும்.
அதன்பின்னா் தமிழில் பெயா்ப் பலகை வைக்காத நிறுவனங்களை ஆய்வு செய்து, நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.
எனவே, மாவட்டத்தில் இயங்கும் அனைத்து கடைகள், வணிக சங்கங்கள், உணவு விடுதிகள், பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலை சங்கங்கள் தங்கள் உறுப்பினா்களுக்கும் இத்தகவலை தெரிவித்து தமிழில் பெயா்ப் பலகைகள் 100 சதவீதம் அமைக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் மாதேஸ்வரன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் மகாதேவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.