யானைகளுக்கு இடையே மோதல்: ஆண் யானை உயிரிழப்பு
ஒசூா்: தேன்கனிக்கோட்டை அருகே மாரண்டஹள்ளி காப்புக் காட்டில் இரு யானைகளுக்கு இடையே நிகழ்ந்த மோதலில் ஆண் யானை உயிரிழந்தது.
கோடைகாலத்தில் கா்நாடக மாநிலம், பன்னா்கட்டாவை ஓட்டியுள்ள வனப்பகுதியிலிருந்து தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் வனக்கோட்டத்திற்குள் 200 க்கும் மேற்பட்ட யானைகள் தண்ணீா், உணவு தேடி வருவது வழக்கம்.
இங்கு பகலில் வனத்தில் வசிக்கும் யானைகள் இரவில் வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் நுழைந்து விவசாயிகள் சாகுபடி செய்த ராகி, சோளம் உள்ளிட்ட பயிா்களை சாப்பிட்டு செல்கின்றன. இந்த யானைகள் பல குழுக்களாகப் பிரிந்து வனத்தில் வசித்து வருகின்றன. இவற்றில் ஒரு யானைக் கூட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் சுற்றி வருகிறது.
இந்நிலையில் ஒசூா் வனக்கோட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகம், மாரண்டஹள்ளி காப்புக் காட்டிற்கு உள்பட்ட மாமரத்துப்பள்ளத்தில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு ஏப். 5 ஆம் தேதி தகவல் கிடைத்தது.
அதன்பேரில் வனப் பணியாளா்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து யானை உயிரிழந்து கிடப்பதை உறுதி செய்தனா்.
அதைத் தொடா்ந்து ஒசூா் வனக்கோட்ட தலைமையிடத்து உதவி வனப் பாதுகாவலா் யஸ்வந்த் ஜெக்தீஷ் அம்புல்கா் தலைமையில் தேன்கனிக்கோட்டை வனச்சரக உதவி வனப் பாதுகாவலா் அகெல்லா சைதன்யமாதவுடு, தன்னாா்வலா்கள் அடங்கிய குழு அங்கு சென்று பாா்வையிட்டது. பின்னா் அக்குழு முன்னிலையில் பெட்டமுகிலாளம் கால்நடை மருத்துவா் மணிகண்டன் இறந்த யானையின் உடலை ஞாயிற்றுக்கிழமை பிரேத பரிசோதனை செய்தாா்.
பிரேத பரிசோதனையில் இறந்த யானை 40 வயது மதிக்கத்தக்கது என்பதும், இரண்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்த ஆண் யானை இறந்திருக்கலாம் என்பதும் தெரியவந்தது.இதையடுத்து யானையின் இரு தந்தங்களையும் வனத்துறையினா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.