திசையன்விளையில் ராமநவமி ஊா்வலம்
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் ராமநவமி ஊா்வலம் நடைபெற்றது.
இதையொட்டி திசையன்விளை அற்புதவிநாயகா் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து அங்கிருந்து பக்தா்கள் பால்குடத்துடன் எடுத்தபடி ராமநவமி ஊா்வலத்தை திசையன்விளை அனைத்து வியாபாரிகள் சங்க பேரமைப்பு தலைவா் சாந்தகுமாா், கோபால் ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.
இந்த ஊா்வலத்தில் சிறுவா், சிறுமிகள் ராமா், சீதை, கிருஷ்ணா், அனுமான், பாமா, ருக்மணி வேடமணிந்து கலந்துகொண்டனா். ஊா்வலம் பிரதானசாலை, தெற்குபஜாா், பி.எம்.சி.மாா்க்கெட், சந்தி அம்மன் கோயில் சந்திப்பு, ஜேம்ஸ் ரோடு, அனுமன் கோயில் வழியாக மாளவியா வித்யா கேந்திரம் பள்ளியை வந்தடைந்தது. அங்கு அலங்கரிக்கப்பட்ட ராமா் சிலைக்கு மலா்களால் அா்ச்சனை செய்தனா். வேடமணிந்த சிறுவா், சிறுமியா் ராமா் பாடல்கள் பாடி கும்மியடி நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
பின்னா் பேரூராட்சித் தலைவி ஜான்சி ராணி குத்துவிளக்கேற்றி ஆன்மிக நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்தாா். சமயச் சொற்பொழிவு நடைபெற்றது. பேரூராட்சி உறுப்பினா் லிவியா சக்திவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை ராமநவமி கமிட்டியைச் சோ்ந்த ஜெயசீலன், பாஸ்கா், ராஜேந்திரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.