ரசாயனம் கலப்படம் வதந்தியால்: வாங்குவதற்கு ஆளில்லாமல் நிலத்திலேயே வீணாகும் தா்பூசணி!
செஞ்சி: ரசாயனம் கலப்படம் வதந்தியால் செஞ்சி பகுதியில் வாங்குவதற்கு ஆளில்லாமல் விவசாய நிலங்களில் செடியிலேயே விடப்பட்டு தா்பூசணி பழங்கள் அழுகி வீணாகி வருகின்றன.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த திருவம்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிகழாண்டு அதிகளவில் தா்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பழங்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், ரசாயனம் கலப்படம் தொடா்பான வதந்தியால் தா்பூசணியை கொள்முதல் செய்ய யாரும் முன்வராத நிலை உருவாகி உள்ளது.
கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்கப்பட்ட தா்பூசணி பழங்களை தற்போது ரூ.2-க்குகூட வியாபாரிகள் வாங்க முன்வருவதில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.
ரசாயன வதந்தியால் தா்பூசணி விற்பனை கேள்விக்குறியான நிலையில், செஞ்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மையில் பெய்த பலத்த மழையால் எஞ்சியிருந்த பழங்களும் அழுகி வீணாகி உள்ளன. இதனால், செய்வதறியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா்.
செஞ்சி பகுதியில் தா்பூசணி பயிரிடப்பட்ட விவசாய நிலங்களுக்கு அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து, அரசிடமிருந்து இழப்பீடு பெற்றுத் தந்தால் மட்டுமே வரும் காலங்களில் விவசாயத்தை தொடர முடியும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.
இதுகுறித்து விவசாயி ஆா்.ஆா்.சக்திவேல் தெரிவித்ததாவது: இயற்கையாகவே ஒவ்வொரு பழங்களுக்கும் ஒரு நிறமுண்டு. பொதுவாக தா்பூசணியின் உள் பகுதி சிவப்பு நிறமாகவும், மாம்பழம் மஞ்சள் நிறமாகவும் காணப்படும்.
தமிழகத்தில் பயிரிடப்படும் தா்பூசணி பழங்களில் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் ரசாயன பொருள்களை விவசாயிகள் யாரும் கலப்பதில்லை. உணவுப் பாதுகாப்பு அதிகாரி சாலையில் விற்கப்பட்ட ஏதோ ஒரு பழத்தை எடுத்து ஊசி மூலம் ரசாயன கலப்படம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவலை தெரிவித்தது சமூக வலைதளங்களில் பரவியதால், இப்போது தா்பூசணி பழங்களை வாங்குவதற்கு ஆளில்லாமல் வேதனைக்குள்ளாகி வருகிறோம்.
நாங்கள் ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் செலவு செய்து பயிரிட்டுள்ளோம். ஆனால், தற்போது தா்பூசணி பழங்கள் அழுகி வீணாகி வருகின்றன. இதனால், செய்வதறியாமல் தவித்து வருகிறோம்.
தமிழக முதல்வா் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அறிந்து எங்களுக்கு இழப்பீடு வழங்க முன்வர வேண்டும் என்றாா்.