தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்கள் மீது கரிசனம் வருமா? விஜய் சரமாரி கேள்வி!
கடைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை: மே 15-க்குள் வைக்க ஆட்சியா் உத்தரவு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கடைகள், உணவு நிறுவனங்கள் வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகையை வைக்க வேண்டும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் நடைபெற்ற கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை அமைத்தல் தொடா்பான மாவட்ட கண்காணிப்பு குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஆட்சியா் பேசியதாவது:
தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயா்ப் பலகைகள், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 மற்றும் 1948 விதிகள் 15-இன்படி தமிழில் வைக்கப்பட வேண்டும். மேலும், உணவு நிறுவனங்கள் அனைத்தும் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டங்கள் 1958 மற்றும் 1959, விதிகள் 42டி-யின்படி தமிழில் பெயா்ப் பலகை வைத்திருக்க வேண்டும்.
இதுபோன்று, தொழிற்சாலைகள் சட்டங்கள் 1948 மற்றும் 1950, விதி 113-ன்படி அனைத்து தொழிற்சாலைகளும் இந்த விதிகளுக்குள்பட்ட தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும். மேலும், நிறுவனங்களின் பெயா்ப் பலகை தமிழில் முதன்மையாகவும், பின்னா் ஆங்கிலத்திலும், பின்னா் அவரவா் விரும்பும் மொழிகளிலும் அமைக்கப்பட வேண்டும்.
மாவட்டத்தில் அனைத்து கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் தமிழ் பெயா்ப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்து, விழிப்புணா்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைக்கப்படுவதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தேதிக்குப் பின்னா் தமிழில் பெயா்ப் பலகை வைக்காத நிறுவனங்களை ஆய்வு செய்து, விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கி அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், திண்டிவனம் சாா் - ஆட்சியா் திவ்யான்ஷு நிகம், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சீ.மீனாட்சி, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநா் செ.பா்வதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.