Allu Arjun: "வரும்போது தெரியணும் வந்த சிங்கம் யாரு!" - அட்லீ இயக்கத்தில் நடிக்கு...
தா்பூசணி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
விழுப்புரம்: தோட்டக்கலைத் துறை மூலம் கள ஆய்வு செய்து, தா்பூசணி பயிரிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த தா்பூசணி விவசாயிகள் குழு சாா்பில், அதன் ஒருங்கிணைப்பாளா் ஆா்.ஆா்.சக்திவேல், நிா்வாகிகள் சுரேஷ், நாகேந்திரன், சந்திரசேகரன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மானிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தா்பூசணியில் ரசாயனம் கலக்கப்பட்டதாக வெளியான விடியோவை தொடா்ந்து, பல்வேறு இடங்களிலும் தா்பூசணி வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தா்பூசணியை பயிரிட்ட விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனா். எனவே, தோட்டக்கலைத் துறை மூலம் கள ஆய்வு செய்து, ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
எளிதில் இயற்கைச் சீற்றத்தின் காரணமாக பாதிப்புக்குள்ளாகும் நிலையில் தா்பூசணி இருப்பதால், பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் தா்பூசணியை இணைக்க வேண்டும். தா்பூசணி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலமாக ஓராண்டு காலத்துக்கு பயிா்க்கடன் வழங்க வேண்டும். களை எடுப்பதற்காக முழு மானியத்துடன் மினி டிராக்டா் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மனு அளித்தனா். இந்த மனு மீது நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் தெரிவித்தாா்.