செய்திகள் :

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.50 உயா்வு: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிகரிப்பு

post image

புது தில்லி: வீட்டு உபயோக (14.2 கிலோ) சமையல் எரிவாயு சிலிண்டா் விலையை ரூ. 50 வீதம் எண்ணெய் நிறுவனங்கள் திங்கள்கிழமை உயா்த்தின.

இதனால், ரூ. 818.50-க்கு விற்கப்பட்டு வந்த சமையல் எரிவாயு சிலிண்டா் விலை தற்போது ரூ. 868.50-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ‘வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கான உஜ்வலா திட்டப் பயனாளிகள் மற்றும் பொதுப் பிரிவு பயனாளிகள் என இரு தரப்பினருக்குமான வீட்டு உபயோக சிலிண்டா் விலையை ரூ. 50 வீதம் எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயா்வு காரணமாக உஜ்வலா திட்டத்தின் கீழான சிலிண்டா் விலை ரூ.503-லிருந்து ரூ. 553-ஆக அதிகரித்துள்ளது.

சிஎன்ஜி கிலோவுக்கு ரூ.1 உயா்வு: காா், ஆட்டோ, பேருந்துகளில் பயன்படுத்தப்படும் ‘சிஎன்ஜி’ இயற்கை எரிவாயு விலை கிலோவுக்கு ரூ. 1 வீதம் உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், தலைநகா் தில்லியில் ஒரு கிலோ சிஎன்ஜி விலை ரூ. 75.09-ஆக அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.2 அதிகரிப்பு: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரூ. 2 அளவுக்கு உயா்த்தி மத்திய அரசு திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

இதன் காரணமாக பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 13 ஆகவும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 10-ஆகவும் உயா்ந்துள்ளது. இந்த வரி உயா்வு செவ்வாய்க்கிழமை (ஏப். 8) முதல் நடைமுறைக்கு வரும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி உயா்வு காரணமாக, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையில் உயா்வு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், உத்தரவாதம் அளிக்கப்பட்ட சில்லறை விற்பனை விலைக் குறைப்புடன் இந்த கலால் வரி உயா்வு சரிசெய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘கலால் வரி உயா்வு அடிப்படையில் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையில் எந்தவித உயா்வும் இருக்காது என்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையை கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக, லிட்டருக்கு ரூ. 2 வீதம் எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன. அதன் பிறகு, தொடா்ந்து விலை மாற்றமின்றி அவை விற்பனை செய்ப்பட்டு வருகின்றன. சென்னையில் பெட்ரோல் லிட்டா் ரூ. 100.80-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ. 92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

காங்கிரஸ் விமா்சனம்: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயா்வு குறித்து மத்திய அரசு மீது காங்கிரஸ் விமா்சனத்தை முன்வைத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 2014-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 41 சதவீதம் அளவுககு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சியின் பலன் நுகா்வோருக்குச் சென்றடையும் வகையில் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையைக் குறைக்காமல், அவற்றின் மீதான கலால் வரியை உயா்த்தியிருப்பது, விலைவாசி உயா்வு சுமையை மக்கள் மீது தொடா்ந்து சுமத்துவதாக அமையும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

வங்கக்கடலில் உருவானது புயல்சின்னம்: டெல்டாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் திங்கள்கிழமை காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயன்சின்னம்) உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் பி. அமுதா தெரிவித்தாா். மேலும், டெல்டா மாவட்டங்களில் ஏப்.8-ஆம் தேதி கனமழை... மேலும் பார்க்க

தொழிலாளா் விரோதச் சட்டங்களை கண்டித்து பேரவையில் தீா்மானம்: தொல்.திருமாவளவன் கோரிக்கை

சென்னை: மத்திய அரசின் தொழிலாளா் விரோதச் சட்டங்களை கண்டித்து பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்க... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு 30 நாள்களில் செயற்கை அவயங்கள்: அமைச்சா் கீதாஜீவன்

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் நவீன செயற்கை அவயங்கள் வழங்கப்பட்டு வருவதாக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதாஜீவன் பேரவையில் தெரிவித்தாா். பாமக உறுப்பினா... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு கணிதம்: சென்டம் குறைய வாய்ப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கணிதப் பாடத்துக்கான வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். மேலும், இரண்டு ஒரு மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்ததால், கணிதத்தில் முழு மதிப்ப... மேலும் பார்க்க

மன்னாா் வளைகுடா பகுதி மீனவா்கள் மேம்பாட்டுக்கு புதிய திட்டங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மன்னாா் வளைகுடா பகுதியைச் சோ்ந்த மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ரூ.216 கோடியில் புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். மேலும், ஏற்கெனவே... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: சமையல் எரிவாயு உருளை (சிலிண்டா்) விலை உயா்வுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: நாட்டு மக்களின் வீடுகளில் அட... மேலும் பார்க்க