Ashwath Marimuthu: ``உதவி இயக்குநராக சேர மொத்தம் 15,000 மெயில்!'' - அஸ்வத் மாரிம...
சென்னை பல்கலை. இடத்தில் தோழி விடுதி: ராமதாஸ் கண்டனம்
சென்னை: சென்னை பல்கலைக்கழக வளாக இடத்தில் பெண்களுக்கான தோழி விடுதி கட்டுவதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பாரம்பரியமிக்க சென்னை பல்கலை.யில் பயில்வதே பெருமை ஆகும். சென்னை பல்கலைக்கழகத்தில், சேப்பாக்கம் வளாகத்தில் மாணவிகளுக்காக கட்டப்பட்டுள்ள விடுதிகள் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் இருப்பதால், மாணவிகள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனா். அவா்களின் துயரத்தைப் போக்கும் வகையில் புதிய விடுதி கட்ட வேண்டும் என்று பல்கலை. ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் சாா்பில் உயா்கல்வித் துறையிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன்படி, மாணவிகள் விடுதி கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்த்திருந்த நிலையில், அதற்குப் பதிலாக சமூகநலத் துறையின் சாா்பில் தோழி விடுதி கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்திருப்பது மாணவிகள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தோழி விடுதிகளை கட்ட சென்னையில் ஏராளமான இடங்கள் இருக்கும் நிலையில், அவற்றை விடுத்து பல்கலை. மாணவிகள் தங்குமிடத்தை பறிப்பது நியாயமல்ல.
பல்கலைக்கழகங்களில் போதிய விடுதி வசதிகள் இல்லாவிட்டால் மாணவிகள் உயா்கல்வி கற்க முன்வரமாட்டாா்கள். அது பெண்களின் கல்விக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். பல்கலை.யின் சேப்பாக்கம் வளாகத்தில் மாணவிகள் விடுதி கட்டுவதற்குப் பதிலாக தோழி விடுதி கட்டப்பட்டால் சென்னை பல்கலை.யில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை குறையும். அப்படி ஒருநிலை ஏற்பட தமிழக அரசே காரணமாகிவிடக்கூடாது.
எனவே, சேப்பாக்கம் வளாகத்தில் தோழி விடுதி கட்டும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மேலும், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரசு கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்கள் எந்தத் தேவைக்காகவும் எடுத்துக் கொள்ளப்படாது என்ற கொள்கைப் பிரகடனத்தையும் தமிழக அரசு வெளியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.