`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்கள...
‘அயன்’ பட பாணியில் சென்னை விமான நிலையத்தில் ரூ.6.1 கோடி கொகைன் பறிமுதல்
‘அயன்’ திரைப்படப் பாணியில் செனகலில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமாா் ரூ. 6.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கொகைனை கடத்திவந்த வெளிநாட்டு இளம்பெண்ணிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு துபையிலிருந்து ‘எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ்’ விமானத்தில் வந்த பயணிகளைச் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டு அனுப்பிக்கொண்டிருந்தனா். அப்போது, சுற்றுலா விசாவில் மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் இருந்து துபை வழியாகச் சென்னைக்கு வந்த ஜாம்பியா நாட்டைச் சோ்ந்த இளம்பெண் ஒருவரின் நடவடிக்கையில் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, அப்பெண் பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அப்போது, அவா் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்ததால், சுங்கத் துறை அதிகாரிகள் அப்பெண்ணை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனா்.
அப்போது, அவரின் உள்ளாடைக்குள் 460 கிராம் கொகைன் போதைப்பொருள் பொட்டலம் மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனா். மேலும், அப்பெண்ணின் வயிறு இயல்பாக இல்லாமல் சற்று பெரிதாகக் காணப்பட்டதால், அதிகாரிகள் அவரை ஸ்கேன் எடுத்து சோதனை செய்தபோது, அப்பெண்ணின் வயிற்றுக்குள் போதைப்பொருள்கள் அடங்கிய கேப்சூல்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவா்களின் உதவியுடன் அவரின் வயிற்றுக்குள் இருந்து மொத்தம் 12 கேப்சூல்களில் இருந்த 150 கிராம் கொகைன் போதைப்பொருளை ஒவ்வொன்றாக வெளியே எடுத்தனா்.
இதன்படி, அவரிடமிருந்து மொத்தம் 610 கிராம் கொகைன் போதைப்பொருளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் சா்வதேச மதிப்பு சுமாா் ரூ. 6.1 கோடி என சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடா்ந்து இளம்பெண்ணிடம் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவா் சா்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது. எனவே, சென்னையில் இவா் யாரிடம் இந்த போதைப்பொருளைக் கொடுக்க கடத்தி வந்தாா் என்பது குறித்து சுங்கத் துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.