திருவொற்றியூரில் ரூ.9.78 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்க ஒப்புதல்
சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூரில் புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு மண்டலக் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி திருவொற்றியூா் மண்டலத்தின் 32-ஆவது மாதாந்திர சிறப்புக் கூட்டம், மண்டலக் குழுத் தலைவா் தி.மு.தனியரசு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவொற்றியூா் மாநகராட்சியில் காய்கறி, பழங்கள், இறைச்சி, மீன் உள்ளிட்டவைகளை விற்கும் வணிக வளாகம் இருந்து வந்தது. கட்டடங்கள் பழுதடைந்த காரணத்தால், பழைய வணிக வளாகத்தை இடித்துவிட்டு ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், 14 வாா்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை மேம்பாடு, தெருவிளக்கு, பள்ளிக்கூட கட்டணங்கள் சீரமைப்பு, மழைநீா் கால்வாய் அமைத்தல் உள்ளிட்டவைகள் குறித்த 96 தீா்மானங்கள் கூட்டத்தில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன.